பழங்காலத்தில் பரந்துவிரிந்து கிடந்த பண்ணையின் வயல்வெளிகளில் வேலை செய்வதற்கு அதிக அளவில் ஆட்களை நியமிக்கபெற்றிருந்தனர். அதற்கிணங்க வெள்ளையன் என்ற சிறுவனும் விவரம் தெரிந்த காலத்திலிருந்து இந்த பண்ணையில் வேலை பார்த்து வந்தவன்தான். பெரியபண்ணைகாரருக்கு இச்சிறுவன் சற்று செல்லபிள்ளையாக இந்த பண்ணையில் வளர்ந்து வந்தான். இந்த பண்ணையில் பெரியபண்ணைகாரர் காலத்தில் ஆட்டுகுட்டியை மேய்க்க ஆரம்பித்து படிபடியாக இடைகால பண்ணைகாரர் அவர்களின் செல்வாக்கை பெற்று விவசாய உழவு துறையில் புகுந்து பின்னர் முழுவிவசாயத்திற்கும் பொறுப்பேற்றார். பொதுவாக அனைவரும் இவரை "வெள்ளை" என்றே அழைத்து வந்தனர். இவரின் உடல் எடையை ஆடிகாற்று அடித்து சென்று விடும் அளவிற்கு காற்றாடி உடம்பு. படிப்பறிவு இல்லா இவருக்கு வியாபார சந்தை நுணுக்கத்தில் அபார அறிவு பெற்றிருந்தார்.
வெள்ளையுடன் விவசாய வேலை செய்வதில் அனைவருக்கும் அதீதவிருப்பமுண்டு ஏனெனில் கதைகளையும் புராணங்களையும் மிக அற்புதமாக சூழ்நிலைக்கேற்றவாறு நமது செவிகளிலே புகுத்துவார். இவரின் பேச்சிலிருந்தே வரலாற்று சிறப்புமிக்க இந்த பண்ணையின் பெருவாரியான பழைய சுவடுகளை அறிந்து கொண்டோம். பெருமனிதர்களின் சிந்தனையை பேசுபவன் உயர்ந்த அறிவையுடையவன் என்றும், கடந்த கால நிகழ்வுகளை அசைப்பவன் நடுத்தர அறிவை பெற்றவன் என்றும், மனிதர்களை பற்றி மட்டுமே உரையாடுபவன் குறுகிய அறிவையுடையவன் என்றும் பொதுவாக நமது சமுதாயத்தில் புதைந்து கிடக்கும் கருத்துகளாகும். அதுபோல வெள்ளையின் பேச்சு எப்பொழுதும் பழங்கால விவசாய செயல்முறைகளை பற்றியும் அதனை செயல்படுத்தியவர்களின் சிந்தணையை பற்றியும் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து அச்செயல்களால் ஏற்பட்ட நன்மை தீமைகளையும் மிகதெளிவாக எடுத்து கூறி இக்காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைக்க வழிவகை செய்வார். ஆளறிந்து ஆளின்குணமறிந்து இடமறிந்து இடத்தின்தன்மையறிந்து பிழையின்றி சரிவின்றி நுணுக்கசிறப்பாக செய்திகளை புகுத்தும் பேராற்றல் வெள்ளையிடம் அதிகம் உண்டு. பொறுமை என்ற சொல்லுக்கு தன் செயல்களால் மறுவடிவம் தந்து எண்ணற்ற பொலவங்களை [பிரச்சணை] தடுத்து பண்ணையை சீரான பயணதில் இயங்க உறுதுணை புரிந்தார். தமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு தெரிவித்தும் தனக்கு தெரியாததை தெரிந்தவர் சிறியவராயினும் உன்னிப்பாக கேட்டறியும் சிறந்த குணத்தை கொண்டவர் வெள்ளையன்.
இறைவன் வாசம் செல்லாது நாம் எதையும் அடைய இயலாது என்பது இவரின் கருத்து. இவர் கூட்டு முயற்சி என்பது கடின உழைப்பு மக்களுக்கு இருக்க வேண்டிய அவசியத்தையும் மனிதர்களை மதிக்கும் முறை பற்றியும் நிறைய கூறி தன் வாழ்கையில் வாழ்ந்து காட்டியிருகிறார். மேற்கே கொஞ்சம் பொழுது இருந்தால் கன்றுகுட்டிக்கு புல் புடுங்க சொல்வது பண்ணையின் வழக்கம்; அதாவது மாலை வேலை கலைந்த பொழுதில் கூட சூரியன் மறைவுக்கு இன்னும் சற்று நேரம் இருக்மேயானால் பண்ணைகார மக்கள் அவர்களிடத்தில் கொஞ்சம் கன்றுகுட்டிக்கு புல் புடுங்க சொல்வார்களாம். அதுபோல வேலை கலையும் தருவாயில் பார்க்கும் வேலையானது சற்று முடியாது சில மணிதுளிகள் நீளும் பொழுது "காதில் வெயிலடித்து விட்டது" என்று சட்டென இவர் கூறுவார். அதாவது இவ்விடத்தில் பொழுது [சூரியன்] மேற்கில் இறங்கிவிட்டதையும் அதன் சூரிய ஓளிகதிர்கள் நேரடியாக காதில் படுகின்றது என்றும் அதன்பொருட்டு வேலையை கலைக்க வேண்டும் என்பதை எடுத்துரைகிறார். இது போன்று பல சுவராசிய சுவைகளை படைத்திருக்கிறார், காதினிலே தேனை பாய்ச்சியிருகிறார். இவரும் ஒரு நல்ல வாழ்கைபாடம் எம்போன்ற விவசாயப்பண்ணை மக்களுக்கு ஆகையால் பண்ணையின் சார்பாக இவர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் கோடியாண்டு இப்பூமியில் வாழ வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment