மீன் தொட்டி

Thursday, August 12, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 01

கீழப்பட்டி ஒரு குக்கிராமம். கீழப்பட்டி கிராமம் கொடும்பாலூர் ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊர் உருவான காலத்திலிருந்து விவசாயம் முதற்கண் தொழிலாக கொண்டு விளங்குகிறது. தற்பொழுது சுமார் 25 குடும்பங்களை கொண்டுள்ளது. இக்கிராமத்தில் விவசாய தொழிலை தொடர்ந்து சிறு வணிகம், ஆடு மாடு வளர்த்தல் போன்ற தொழிலையும் இங்குள்ளவர்கள் செய்து வருகின்றனர். கீழப்பட்டி சாலை வழியாக நன்கு உலகத்தோடு இணைந்துள்ளது. திருச்சி - மதுரை சாலையில் விராலிமலையிலிருந்து தெற்கே ஆறு கல் தொலைவில் அல்லது கொடும்பாலூரிலிருந்து வடக்கே இரண்டு கல் தொலைவில் காளப்பனூர் பிரிவுசாலை காணப்பட்டு, அப்பிரிவு சாலையிலிருந்து கிழக்கே இரண்டு கல் தொலைவில் காளப்பனூரை அடுத்து கீழப்பட்டி எனும் இக்கிராமம் அமைந்துள்ளது.


கீழப்பட்டியில் கிழக்கிப்பண்ணை குடி என்பதுதான் முதன் முதலாக தோன்றிய இடையர் குடியாக கருதபடுகின்றது. கிழக்கே அமைந்த பண்ணை கிழக்கிபண்ணை என்றும் அதனால் இவூருக்கு கீழப்பட்டி என பெயர்பெற காரணமென்றும் முதியோர்களின் வாயிலாக அறியப்படுகின்றது. தற்பொழுது இக்கிராமம் வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு இணையாக அனைவருக்கும் மின்சாரவசதி, தொலைபேசி, கம்பியில்லா கைபேசி, இணையதள வசதி, இரண்டு சக்கர மற்றும் அதிநவீன நான்கு சக்கர வாகன வசதிகளை பெற்றுள்ளது. இக்கிராமம் தன் விவசாய சேவையால் சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப பொறியியல் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள், ஆசிரிய பெருமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல துறைகளின் தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது.


No comments:

Post a Comment