மீன் தொட்டி

Saturday, August 28, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 06

கல்வி பயணம்

மூத்தமகனான செந்தில் குமாரை 1981 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாலகுறிச்சியில் உள்ள செய்ண்ட் ஜோஸப் தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் சேர்க்கப்பட்டார். பாலகுறிச்சியில் உள்ள செய்ண்ட் ஜோஸப் தொடக்கப்பள்ளி மற்றும் செய்ண்ட் ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளிகள் தன் கல்வி முறையில் இன்றளவும் அதீத சாதனைகளை செய்து வருகிறது. இப்பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி கல்விகள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். சந்திர சேகர், இரவி மற்றும் அமுதா ஆகியவர்கள் முதலில் சென்னை மாநகரில் சுவாமிகண்ணு கண்காணிப்பிலும், அபுத்தாவின் அரவணைப்பிலும் ஒரு பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர்.


சட்டவல்லுநராக பணியாற்றிவரும் சுவாமிக்கண்ணு அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கும், வீட்டு வேலைகளை கவனிப்பதற்காகவும் அபுத்தாவை சென்னைக்கு அடைக்கப்பன் அவர்கள் அனுப்பிவைத்தார். சுவாமிக்கண்ணு அவர்களின் திருமணத்தையடுத்து அபுத்தாவை சென்னையிலிருந்து பண்ணைக்கு வரவழைக்கப்பட்டார். இதன் காரணமாக இவர்கள் மூவரின் பள்ளிப்படிப்பு பாதிக்கப்பட்டது, உடனடியாக அடைக்கப்பன் அவர்கள் மூவரையும் பாலகுறிச்சியில் தமிழ் வழி கல்வியில் சேர்த்து தொடர்ந்து படிக்க வைத்தார். அபுத்தாவை 1985 ஆம் ஆண்டு பாலகுறிச்சிக்கு அனுப்பி முன்னதாகவே விடுதியில் தங்கி படித்துக் கொண்டுயிருந்த செந்தில் குமார் மற்றும் இவர்கள் மூவரையும் முதலில் படையாச்சி தெருவிலுள்ள ஒரு வாடகை வீட்டில் அமர்த்தி படிக்க வழிவகை செய்தார். ஒரு வருடத்திற்கு பிறகு தோமையம்மாள் வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். இவ்வீடானது பள்ளிக்கும், கிருத்துவ தேவாலயத்திற்கும் மிக அருகாமையில் அமைந்திருந்தது. அபுத்தாவிற்கு தேவையான விறகு, அரிசி, பருப்பு போன்ற அனைத்துப்பொருட்களையும் அடைக்கப்பன் அவர்கள் பண்ணையிலிருந்து மாட்டுவண்டி மூலமாக மாதம்தோறும் பாலகுறிச்சிக்கு அனுப்பிவைப்பார். கிட்டுவையும், காந்தியையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாலகுறிச்சி பள்ளியிலேயே 1986 ஆம் கல்வியாண்டில் தமிழ் வழி கல்விப்பாடத்தில் சேர்த்து விடப்பட்ட இருவரும் தங்கள் கல்வி பயிலும் பயிற்சியை ஒரே பள்ளி வகுப்பில் தொடந்தனர். இத்தருணத்தில் செந்தில்குமார், சந்திர சேகர், இரவி, அமுதா, கிட்டு மற்றும் காந்தி ஆகிய ஆறு பேருடன் அபுத்தவும் தோமையம்மாள் வீட்டில் குடியிருந்தனர்.


தோமையம்மாள் குடும்பம் மாபெரும் உதவிகளை இந்த பண்ணையின் குழந்தைகளுக்காக செய்துவந்தார்கள். தோமையம்மாளுக்கு ஐந்து மகள்களான மேரி, ரோஸி, ராணி, ராசம் மற்றும் ஜெயா ஆவார்கள். ராணி அவர்கள் செயிண்ட் ஜோஸப் ஆரம்பபள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துவந்தார்கள். பண்ணையிலிருந்து வந்த ஆறு பேருக்கு மாலை நேரத்தில் போதனை வகுப்புகள் ஆசிரியை ராணி அவர்களால் நடத்தப்பட்டது. இவர் அந்த ஆறுபேரின் கல்வி வாழ்க்கை சிறப்படைய மிகப்பெரும் தொண்டாற்றினார். மற்ற சகோதிரிகளான மேரி, ரோஸி, ராசம் மற்றும் ஜெயா ஆகியோர்கள் கல்விக்காக உறுதுணை புரிந்தார்கள். வண்ணாரப்பட்டி குடும்பமும் பண்ணை குடும்பம் போலவே அவர்களது குழந்தைகளை பாலகுறிச்சி பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தனர். இக்குழந்தைகளும் ஆசிரியை ராணி அவர்களால் வழிநடத்தப்பட்டனர். இதில் வண்ணாரப்பட்டி இரவி, பழனிச்சாமி ஆகியவர்கள் சந்திர சேகர், இரவி, அமுதா ஆகியவர்களுடன் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வந்தனர். வண்ணாரப்பட்டி ஆறுமுகம், கிட்டு மற்றும் காந்தி ஆகிய மூவரும் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வந்தனர். ஞாயிறு விடுமுறைதினங்களில் பொழுதுபோக்காக மிதிவண்டி சக்கரங்களை உருட்டி விளையாடுதல், அங்குள்ள கிணறுகளிலும், பெரியகுளத்திலும் குளித்து விளையாடுதல், கிளியாட்டம், கிட்டிப்பிள்ளை, பம்பரக்கட்டை, கண்ணாம்பூச்சி, நூற்றாம் குச்சி, பல்லாங்குழி, தாயம், புளியங்கொட்டை, அச்சாங்கல் போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தார்கள். ஞாயிறுதோறும் மாலைப்பொழுதில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்தையும், மற்ற நிகழ்ச்சிகளையும் காண அங்குள்ள கிருத்துவ குடும்பங்களுக்கு செல்வது வழக்கம்.


விவசாய வேலைகளை பெரிதும் போற்றும் இவர்கள் சில நேரங்களில் அங்குள்ள விவசாய குடும்பங்களில் கடலை உடைத்தல், கரும்பு வெட்டுதல் போன்ற வேலைகளையும், சாமியார் தோட்டத்திலுள்ள செடிகொடிகளுக்கு களைவெட்டுதல், நீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளையும் செய்து வந்தார்கள். கிருத்துவ தேவாலயத்திற்கு சென்று வழிபடுதல், வருடந்தோரும் வரும் திருவிழா, தேரோட்டம், யேசு பரம்பொருளின் கல்வாரி மலை பயணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொதுமதஅடிப்படை வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அடைக்கப்பன் அவர்கள் பலமுறை பாலக்குறிச்சிக்கு பயணம் செய்து தன் தாயாரையும் அங்குள்ள அனைவரையும் பார்த்து நலம் விசாரித்து வருவார்கள். அதே போன்று இராசப்பன் மற்றும் சுவாமிக்கண்ணு ஆகிய இவர்களும் பாலக்குறிச்சிக்கு சென்று அனைவரையும் கண்டு நலம் ஆராய்ந்து வந்தார்கள். அபுத்தா அவர்கள் மிகச்சிறப்பாக தன் கடமையை செய்து, அனைவரையும் ஒரே அளவுகோலால் பார்த்து, எந்த பாரபட்சமின்றியும் வளர்த்து வந்தார்கள். இருப்பினும் பண்ணைக்குழந்தைகளை பராமரித்து வருவதில் பல சிரமங்களை எதிர் கொண்டு, அதனை தன் அதீத புத்திக்கூர்மையால் மிகவும் சாதூர்த்தியமாக கையாண்டு வந்தார். இவர் சுட்டிதனம் செய்பவர்களுக்கு தண்டனை வழங்கி அதை செயல்படுத்துவதில் இவருக்கு நிகர் யாரும் இருக்க இயலாது. இரு கைகளையும், கால்களையும் பிடித்துக்கொண்டு திரட்சியான பச்சை மிளகாயை கண்ணில் கிள்ளி எறிவதை கடைசிக்கட்டமாக இவர் கையாலும் தண்டனை முறை ஆகும்.


இவர்களுக்கு தினேஷ்குமார், திலீப்குமார், வள்ளி, ஜோஸ், தாஸ், ஜேம்ஸ், கலா, லதா போன்ற தங்களுடன் படித்த தோழர்கள், தோழிகள் ஆவார்கள். தேர்வு மற்றும் பண்டிகை விடுமுறைகளில் அனைவரும் சொந்தவூருக்கு செல்வது வழக்கம். செந்தில்குமார் 9 ஆம் வகுப்பும், சந்திர சேகர், இரவி மற்றும் அமுதா உள்ளிட்டோர் 5 ஆம் வகுப்பும், கிட்டு மற்றும் காந்தி ஆகிய இருவரும் 4 ஆம் வகுப்பும் படித்துக்கொண்டு இருக்கும்பொழுது அபுத்தாவின் உடல் நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு 1990 ஆம் ஆண்டு பாலக்குறிச்சி பள்ளிவாழ்க்கையை அடைக்கப்பன் அவர்கள் முடிவின்படி, செந்திலை மட்டும் அங்கேயே தொடர்ந்து படிக்கவைத்து, மற்ற அனைவரையும் சொந்த ஊரிலே படிக்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


விராலிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சந்திர சேகர், இரவி ஆகிய இருவரையும் 6 ஆம் வகுப்பிலும், கொடும்பாலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காந்தியை 5 ஆம் வகுப்பிலும் - அமுதாவை 6 ஆம் வகுப்பிலும், காளப்பனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் கிட்டுவை 5 ஆம் வகுப்பிலும் சேர்த்து தொடர்ந்து படிக்கவைக்கப்பட்டது. காளப்பனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் போஸ் மற்றும் சக்தி இருவரும் ஏற்கனவே நுழைவு பெற்று படித்து வந்தார்கள். இவர்களுடன் செல்வம்.து, கணேஷன், சீனிவாசன்., செல்வம், பழனியப்பன், அடைக்கன் [பாஸ்கர்], லட்சுமி, செல்லமணி, மீனாட்சி, கண்ணன், குமரேசன், தங்கமணி, பூங்கொடி போன்ற உள்ளூர் தோழ பெருமக்களும் ஆங்காங்கே கல்வி பயின்று வந்தார்கள். சுவாமிக்கண்ணு அவர்கள் சென்னை கோல பெருமாள் செட்டி வைஷ்னவ மேல்நிலைப்பள்ளியில் நவீன் மற்றும் சரண்குமார் இருவரும் நுழைவு பெற்று படிக்க ஏற்பாடு செய்தார்கள். கிட்டு தன் 6 ஆம் வகுப்பை கொடும்பாலூரில் தொடர்ந்து படித்தார். போஸ் மற்றும் சக்தி தங்கள் 5 ஆம் வகுப்பை காளப்பனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் முடித்துவிட்டு 6 ஆம் வகுப்பை போஸ் விராலிமலையிலும், சக்தி கொடும்பாலூரிலும் தொடர்ந்து படித்தார்கள். கிட்டு-காந்தி தங்கள் 8 ஆம் வகுப்பை விராலிமலையில் தொடர்ந்து படித்து வந்தார்கள். இதுவரை அனைவரும் பண்ணையின் நிழலில் தங்களது கல்வி வாழ்க்கையில் பயணித்தார்கள். பண்ணையின் நிர்வாகப்பொறுப்பு சில அரசியல் காரணமாக அடைக்கப்பன் அவர்களிடமிருந்து இராசப்பன் அவர்களிடத்தில் 1993 ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment