மீன் தொட்டி

Friday, August 13, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 02

மூக்காண்டிக்கோனார்

உயர்திரு. அடைக்கக்கோனார் அவர்களுக்கு மூக்காண்டிக்கோனார் மற்றும் பழனிச்சாமிகோனார் ஆகிய இரு மகன்களும் செல்லம் மற்றும் சின்னமாள் ஆகிய இரு மகள்களும் பிறந்தனர். முந்தைய காலத்தில் சிறு விவசாயம் செய்துவந்த இவர்களது குடும்பம் அ.மூக்காண்டிக்கோனார் அவர்களின் கடின உழைப்பின் பயனாக பேரும் புகழும் ஓங்கி நிலங்களும் சொத்துக்களும் பன்மடங்காக உயர்ந்து பெரியபண்ணை எனும் இலக்கை அடைந்தது. மூக்காண்டிக்கோனார் அவர்கள் பல கிராமங்களை தன் நிர்வாகத்தின் கட்டுகுள் வைத்திருந்தார். இவருக்கு சொந்தமாக பல குளத்து நிலங்களையும் அதை சார்ந்த பகுதிகளையும் மிக செம்மையாக பராமரித்து வந்தார். இவருக்கு மூன்று துணைவியர்கள், முதல் துணைவியின் பெயர் தெரியவில்லை மற்றும் அவருக்கு குழந்தையும் இல்லை. முதல் மனைவி குறைந்த ஆயுட்காலத்தில் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இரண்டாவது துணைவியின் பெயர் செவப்பாயி மற்றும் இவருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை உண்டு, பெயர் செவத்தக்கண்ணு [மூக்காயி] ஆகும். செவத்தக்கண்ணு அவர்கள் 1992 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். மூன்றாவது மனைவியின் பெயர் பழனியாயி, இவரைதான் இன்றையதலைமுறை மக்கள் அனைவரும் கண் கூடாக கண்டு இருகின்றனர். இவருக்கு மூன்று ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர். மூப்புவரிசைபடியே, பெரியக்கா, அடைக்கப்பன் - பண்ணைக்காரர், இராசாமணி, இராசப்பன், மற்றும் சுவாமிக்கண்ணு ஆவார்கள்.

.மூக்காண்டிக் கோனாரின் தம்பி அ.பழனிச்சாமி கோனார் சின்னப்பண்ணைகாரர் அவர்களுக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவியின் பெயர் சின்னமாள், இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருகின்றனர். இரண்டாவது மனைவி பாக்கியம், இவருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருகின்றனர். மூக்காண்டிக் கோனாரின் ஒரு தங்கையான செல்லத்தை கிழக்கிபண்ணையிலும், மற்றொரு தங்கையான சின்னமாளை பழனியாயியின் தம்பி கோபால்கோனாருக்கு கோத்திராப்பட்டியில் திருமணம் முடித்து வைக்கப்பட்டது. சின்னப்பண்ணைகாரரின் இரண்டாவது மனைவி பாக்கியம், கோத்திராப்பட்டியில் மணமுடிக்கப்பட்ட சின்னமாளின் மகள் ஆவார். அதாவது பாக்கியம் தனது தாய்மாமனையே இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்.

தொன்மையான கிழக்கிப்பண்ணை குடும்பதில் அ.மூக்காண்டிக்கோனார் மற்றும் இவரது பங்காளிகள் அனைவரும் மகள் வழி தலைமுறைகள் என்றும், இன்றளவும் இருகின்ற கிழக்கிப்பண்ணை மற்றும் அவர்களது பங்காளிகள் அனைவரும் மகன் வழி தலைமுறைகள் என்றும் கூறப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் மகன் குடும்பத்திற்கும் மகள் குடும்பத்திற்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டது. சொத்துக்கள் அனைத்தும் மகள், மகன் பாகுபாடின்றி பழங்கால முறைப்படி பிரித்தனர். ஆடுகளையும், மாடுகளையும் ஓட்டிச்செல்லும்போது, இருவருக்கும் பொது மனிதனாக இருப்பவர், மாடு மேய்க்கும் குச்சியை நடுவே எறிவார், அந்த குச்சி விழுந்த இடத்திற்கு முன்னர் செல்லும் ஆடு மாடுகள் அனைத்தும் மகளுக்கும், பின்னால் வருகின்ற ஆடுமாடுகள் அனைத்தும் மகனுக்கும் சொந்தமென பிரிக்கப்பட்டது. இவ்வாறாக குடும்பங்கள் பிரிந்து வளர தொடங்கியது.

கீழப்பட்டியின் பொருளாதாரம் உயர்ந்து காணப்படுவதற்கு காளப்பனூரில் உள்ள அதிக மனிதவளம் முக்கிய [முகமை] காரணமாக விளங்குகிறது மற்றும் புகழ்பெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது. பொருளாதாரத்துக்கு முதன்மையாக விளங்கும் விவசாயத்தொழிலுக்கு இம்மக்கள் ஆற்றிய தொண்டுக்கு ஈடுயிணை எதுவுமில்லை. கருப்பன், வெள்ளையன் ஆகியோர்கள் தங்களது வாழ்நாளை இப்பண்ணைக்காக கடைசி வரை அர்பணித்து இப்பண்ணையில் குறிப்பிடதக்கவர்கள் என்ற வரிசையில் இடம் பெற்றார்கள். அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் காளப்பனூரின் முக்கிய பகுதியில் அமைந்து அனைவருக்கும் அருள்பாளித்து கொண்டுள்ளது. இக்கோயிலின் திருவிழா வருடம் ஒரு முறை ஊர் பொதுமக்களால் சகுனம் கேட்டறிந்து, காப்பு கட்டி, 22 நாள் மண்டகப்படி முறை கொண்டு ஏகபோகமாக நடத்தப்பட்டு வருகிறது.

மூக்காண்டிக்கோனாரின் பண்ணை

மூக்காண்டிக்கோனாரால் கிராமத்திற்கு தேவையான அனைத்து குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் இதர நற்பணிகளையும் சீராகவும், சிறப்பாகவும் செய்து வந்தார். குறிப்பாக குடிநீருக்கு அந்தந்த கிராமங்களுக்கு அருகாமையில் ஊருணிகள் அமைக்கப்பட்டது. ஊருணிகள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு, மழைபொழியும் காலங்களில் அசுத்தநீர் உட்புகாத வண்ணம் நான்குபுறமும் கரையிட்டு, நேரடியான மழைநீரும் மற்றும் ஊற்றுகள் மூலமாக மட்டுமே குடிநீரை சேகரித்து மக்களுக்கு வழங்கப்பட்டது. ஊர் சிக்கல்களை அறிந்தும், அதனை தீர்க்கமாக ஆராய்ந்தும் சுமூகமான முறையில் தீர்த்து வந்தார். இவருக்கென ஒரு கூட்டு வண்டி உண்டு. இந்த வண்டி நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டு, சலங்கைகளாலும், பலவண்ணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு துள்ளிகுதிக்கும் இரு இளம் காளைகளை கூட்டு வண்டியில் பூட்டி தெற்கிக்களத்திலிருந்து கண்யிமைக்கும் பொழுதில் கீழப்பட்டி, காளப்பனூர் மற்றும் பல இடங்களை சென்றடைவார். இவரது காலத்தில் குறிப்பிடும் அளவிற்கு கட்டடக்கலை ஓங்கியிருக்கவில்லை என்றாலும் கிணறுகள், இயந்திர அறைகள் மற்றும் குடியிருந்த கூரை வீடுகள் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நேர்த்தியான அணுகுமுறையாலும், உழைப்பின் மேலுள்ள நம்பிக்கையாலும் மூக்காண்டிக்கோனார் பெரியபண்ணைகாரர் என்ற அங்கிகாரத்தைப் பெற்றார். பெரியகிணறு 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் சதுர வடிவம் கொண்டு வெட்டப்பட்டு, இரு கமலைகள் அமைத்து அன்றும் இன்றும் இக்கிணறு பெரியகிணறு என்று விளங்கிவருகின்றது. அடுத்தபடியாக களத்துகிணறு வெட்டவும், இக்கிணறு வட்டவடிவமாக அமைத்து, அளவில் இருகிணறுகளும் ஒத்து இருக்க வேண்டுமென்று பெரியவிட்டத்தில் வெட்ட முடிவுசெய்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கையில் 17 அடி ஆழத்தில் நீர் ஊற்று காணப்பட்டு, கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழ ஆரம்பித்தது. முக்கிய ஆலோசகர்களின் ஆய்விற்கு பிறகு தற்காலிகமாக துவரைமார் கூண்டு அமைத்து மேலும் 10 அடி ஆழம் வெட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பல இடர்பாடுகளுக்குபின் கிணறு 27 அடியை எட்டியது. தற்காலிக துவரைமார் கூண்டு சுவரை மாற்றம் செய்ய நிலையான சுவர் அமைபதற்காக செங்கல், பைஞ்சுதை [சிமெண்ட்] போன்றவைகளை பயன்படுத்தி சுவர் எழுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டது. பக்கவாட்டு சுவரின் வலுவின்மையை கருத்தில்கொண்டு திட்டமிட்ட விட்டத்தின் அளவிலிருந்து மும்மடங்காக குறைத்து நிலையான சுவர் அமைக்கப்பட்டது. தண்ணீர் ஊற்றின் அளவு அதிகமாக காணப்பட்டதால் இக்கிணறுக்கும் இரு கமலைகள் அமைத்து வெற்றிகரமாக பணி முடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட விசை இயந்திரம் [11 குதிரைதிறன்] நீர் இறைப்பதற்கு வரவழைக்கப்பட்டு, அவ்வியந்திரத்திற்கான அறையையும் மிகமிக அருகிலேயே அமைக்கப்பட்டது. இந்த இயந்திரம் பழுதுபட்டால் சரிசெய்வதற்கு வல்லுநர்கள் குழு கோயமுத்தூர் மற்றும் திருச்சி போன்ற பெருநகரங்களிலிருந்து வரவழைக்கபட்டனர். இப்பழுதுபார்க்கும் வேலையை ஒரு பதின்ம வயது வாலிபன் மிக உன்னிப்பாக கவனித்து வந்து, பிற்காலத்தில் அத்தொழிலில் மாபெரும் வெற்றியை பெற்ற அந்த வாலிபன் மதிப்பிற்குறிய திரு. அடைகன் அவர்கள் [பூசாரி] ஆவார். அல்லுபகல் அறுபது நாளிகையும் நீர் இரைக்கப்பெற்று பண்ணை விவசாயத்திற்கும், பல கல் தூரத்திற்கு அப்பாலுள்ள விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் நீர் அளிக்கப்பெற்று, இந்த களத்து கிணறை தண்ணீர் ஊற்றின் தலைவன் என்று போற்றப்பட்டது. இத்திட்டம் மிகசிறந்த திட்டமாக கருதப்பட்டது. இதுபோன்று சின்னவயல், முத்தைகோன்வயல் மற்றும் பலகுளத்து விவசாய நிலங்களுக்கு கிணறுகளும், சிறுசிறு பாசன வசதிகளும் இவரால் அமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இவரது காலத்தில் எண்ணற்ற ஒற்றையடி பாதைகள் மாட்டு வண்டிச்சாலைகளாக [இட்றைகள்] உருமாறியது. மாட்டுசந்தைகள் மூலமாக தன்னை வெளிவுலகத்திற்கு அறிமுகம் செய்து கொண்டு பெருவாரியான விவசாய பெருமக்களை தன்னுடன் இணைத்து விவசாய துறையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளை கண்டறிந்து செயலாற்றினார்.

அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பணியையும், நிர்வாகத்தையும் மிக செம்மையுடன் இவர் கவனித்துவந்தார். ஆங்கிலேயர் காலனி ஆதிக்கம் நிறைவுபெரும் தருவாயில், திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மூக்காண்டிக்கோனாருக்கு ஒரு கடிதத்தில் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட நெல்லு மூடைகளை உடனடியாக அரசு கொள்முதல் கிடங்கிற்கு அனுப்பிவைக்குமாறு எழுதியிருந்தார். எனது பண்ணையில் உள்ள தானியங்கள் அனைத்தும் எனது மக்களால் உழைத்து ஈட்டியது, ஆகையால் இவையனைத்தும் மக்களுக்கு சேரவேண்டிய தானியங்களாகும், எனவே என் களத்திலிருந்து ஒரு படி உம்மி கூட உமக்கு வந்தடையாது என்று தீர்க்கமாக பதில் கடிதம் எழுதியனுப்பினார். இதுபோன்று இவரால் இயன்ற பொருளுதவியையும் நிதியுதவியையும் சமுதாய மக்களுக்காக செய்து வந்தார் அதற்கு ஒரு சான்றாக விராலிமலை அரசினர் மேல்நிலை பள்ளிக்கு அளித்த நிதிவுதவியை அங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். கீழப்பட்டியில் முக்கியமான குடும்பம் பெரியபண்ணை குடும்பம்தான். இவ்வூரின் குடும்பங்களை ஒவ்வொன்றாக குறிப்பிடுகையில், சின்னப்பண்ணை, சின்ன-சின்னப்பண்ணை, பெரிய வண்டிக்காரர், சின்ன வண்டிக்காரர், அம்மாசிக் கோனார், பூசாரிக்கோனார், மணியார், வடக்கிப்பட்டியார், பெரிய கிழக்கிப்பண்ணை, சின்ன கிழக்கிப்பண்ணை, வல்லக்கோனார் மற்றும் ஆனையக்கோனார் குடும்பங்கள் ஆகும். இக்கிராமம் சுமாராக 30 சதவீதம் படிப்பறிவு பெற்றிருந்தது, ஆனால் அண்மைகாலமாக அனைவருக்கும் கல்வி என்ற மையஅரசு கோட்ப்பாட்டின்படி இந்த விகிதசாரம் வேகமாக அதிகரித்து வருகிறது. காளப்பனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அரசாங்கத்தால் நிறுவப்பட்டு சுமார் 200க்கும் மேற்ப்பட்ட குழந்ததைகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி முற்காலத்தில் இவ்வூரில் வசித்து வந்த பிராமணர்களால் திண்ணை பள்ளியாக நடத்தப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மூக்காண்டிக்கோனாரின் மறைவு

மூக்காண்டிக்கோனார் அவர்கள் 1970 ஆம் ஆண்டு ஒரு துயர நாளன்று தெற்க்கி களத்திலுள்ள தன் படுக்கையிலிருந்து எழமறுத்திருந்தார். காலையில் வெகு நேரமகியும் எழாத காரணத்தால் சின்னமகள் செவத்தக்கண்ணு அவர்கள் தன் தந்தையை எழுப்ப முயற்சித்து இருகின்றார். ஆனால் அவர் இறந்து விட்டாரே, எப்படி எழுவார்? அவர் இம்மக்களுக்கு நல்லதை மட்டும் செய்துவிட்டு, தான் இறக்கும் தருவாயில் கூட யாரிடமும் கூறாது, யாறுக்கும் தொல்லை தர கூடாது என்று எண்ணியிருப்பாரோ என்னவோ? யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த பெரிய மாமனிதர் சொர்க்கத்தை சென்றடைந்திருந்தார். எண்ணிலடங்கா மக்கள் கூட்டம், பேரரசாய் விளங்கிய மாமனிதருக்கு அஞ்சலி செலுத்த அலையலையாய் திரண்டனர். அவரின் இறுதி சடங்குகள் கீழப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் கண்ணீருடனும், அளவிட முடியாத துயரமுடனும் நடந்து முடிந்தது.

No comments:

Post a Comment