பள்ளிக்கு முன்பு
இன்றய தலைமுறையின் பள்ளிப்பருவத்திற்கு முன்பான காலத்தில் அனைவரும் பண்ணையில் தங்கள் மழலைப்பருவ பணிகளை தொடர்ந்தார்கள். குழந்தைகள் என்றாலே விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள்தானே? இவர்களும் அதிக ஆர்வத்துடன் பண்ணையில் விளையாடினார்கள். அடைக்கப்பன் [பண்ணைக்காரர்] அவர்களின் கண்டிப்பிற்கு ஈடு இணை யாரும் இருக்க இயலாது, இவரின் தலைமையில் ஒவ்வொருவரும் படபடப்பு மிகுந்த பயத்துடனே தங்கள் பணியை செய்து வந்தார்கள். இச்சிறுகுழந்தைகள் மட்டும் விதிவிலக்கா என்ன, இக்குழந்தைகளும் அவரின் முரட்டு கண்டிப்பிற்கு தப்பவில்லை. முதல் மகனான செந்தில்குமாருக்கு வேலை கூறுவதற்கு யாரும் முன்வரவில்லை, அவர் எல்லோரிடத்திலும் அன்புபெருக்கு பெற்றுத் தன் இளவயதை கழித்துதான் பள்ளிக்குச்சென்றார். சந்திர சேகர் - இரவி இருவரும் எல்லோரை விடவும் பண்ணையின் மீது சற்று அதிக ஆர்வமாக இருந்தார்கள். அதிகாலைப்பொழுதில் களத்திற்குச்சென்று, வயல்வாய்க்கால் மற்றும் ஆடுமாடுகளை பார்த்து, பின்னர் பண்ணைக்காரரின் முதல்நிலை கண்காணிப்பிலுள்ள கண்ணாவரம் இளங்காளைகளை கவனித்துக் கொள்வார்கள். அமுதா தன் தாயாருக்கு வீட்டுவேலைகளில் உதவிபுரிந்து வந்தார். கிட்டு, காந்தி, போஸ், சக்தி ஆகியவர்களுக்கு இந்தவயதில் சரியான ஊக்கமளிக்கவில்லை, இவர்கள் அனைவரும் அதிகாலைப்பொழுதை பாத்திரங்கள் கழுவுதல், சாணம் தெளித்தல், தண்ணீர் தூக்கி வருதல் போன்ற வேலைகளை செய்து வீட்டிலேயே கழித்தார்கள்.
பொதுவாக லட்சுமி அவர்கள் ஆடுகளையும், செல்லம் அவர்கள் மாடுகளையும் மேய்த்து வந்ததால், அவரவர் பிள்ளைகளும் ஆடுகளையும் மாடுகளையும் முறையே முழுநாள் பொழுதில் மேய்த்துவந்தார்கள். சங்கன் என்பவனை மாடு மேய்ப்பதற்கும், ஆட்டுகுட்டிகளை மேய்த்து வந்த மதி என்பவனை ஆடு மேய்ப்பதற்கும் பண்ணைக்காரர் அவர்கள் நியமனம் செய்தார்கள். ஆட்டுகுட்டிகளை மேய்க்கும் பொறுப்பை கிட்டுவிடம் கொடுக்கப்பட்டது. சிறிது காலம் ஆட்டுகுட்டிகளை மேய்த்து வந்த கிட்டுவை சந்திர சேகருக்கு உதவியாக இளங்காளைகளை கவனிக்கும் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு சேகரின் ஆணைப்படி காளைகளை நேரத்திற்கு தண்ணீருக்கு விடுதல், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை ஆட்டுதல் போன்ற வேலைகளை செய்து வந்தார். கடைகுட்டிகளான காந்தி, சக்தி இருவரும் தன் தாயாருடனே இருந்து வந்தார்கள். போஸ் பண்ணைக்காரரின் பாசத்தைப்பெற்று சில நேரங்களில் அவருடனும், மற்ற நேரங்களில் பண்ணையிலும் சுற்றித்திரிந்துவந்தார்.
ஒரு காலை பொழுதில் வெகுநேரமாகியும் காளைகளை அவிழ்த்துவிடாமல் உதவியாளர்களான காந்தியும் கிட்டுவும் சந்திர சேகரின் பேச்சைக்கேட்க்காமல் விளையாடிக்கொண்டுயிருந்ததால், பண்ணைக்காரரின் கடுங்கோபத்திற்கு ஆளாகப்பட்டு, அவரின் சாட்டையால் இவர்கள் பல அடிகளைவாங்கி அய்யோ அம்மா என்று அலறி ஓலமிட்டனர். இதில் ஒருபுறம் கிட்டு தலைதெரிக்க எங்கு ஓடுகின்றோமென்று அறியாது, களத்திலிருந்து கிழக்கிப்பண்ணை வயல், சீத்தைக்காட்டார் வீடு, வல்லக்கோனார் தோட்டம் வழியாக கீழப்பட்டியை அடைய பன்னிரெண்டு நாழிகை எடுத்துக்கொண்டது, மறுபுறம் காந்தியோ களத்திலேயே தன் தாயாரிடம் சென்று தஞ்சமடைந்தார். அந்த நேரத்தில் பண்ணைக்காரரின் கண்டிப்பு, அவரைக்கண்டால் நெஞ்சம் நடுங்கும் செயல், அவர் இருக்கும் இடம் செல்லாது பல அடிதூரங்கள் மறைந்து செல்லுதல் போன்ற நன்நடத்தை வளர்க்கும் அவரின் பண்புகள் அனைவரையும் மிகவும் வாட்டிவதைத்தது, ஆனால் பலவருடங்களை கடந்து உற்றுணர்ந்து பின்நோக்கிப்பார்த்தால் அதனுடைய நுண்ணிய கோடிக் கணக்கான நல்வழிபடுத்தும் செயல் அர்த்தங்களை காணமுடியும் என்பது உறுதி. புதன் கிழமை மணப்பாறை சந்தையிலிருந்து பண்ணைக்காரர் வாங்கிவரும் கடலைமிட்டாய்க்கு அனைவரும் சிறுவயதில் காத்து நிற்பார்கள். நவீன்-சரண் இருவரும் தன் இளமையைபருவத்தை சென்னையிலே கழித்து, அவ்வப்போது விடுமுறைக்கு கீழப்பட்டி பண்ணைக்கு வருகைபுரிந்து செல்வார்கள். இவ்வாறாக இவர்களின் இளமைப்பருவம் ஒரு நல்ல அடித்தளத்தை பண்ணையின் மூலமாக அமைத்து பின்னர் கல்விக்கூடங்களில் தொடர்ந்தது.
இந்த பண்ணையில் ஒரு முரண்பாடும் இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம், உங்களின் நினைப்பு சரிதான், எப்படி இல்லாமலிருக்கும்? பல சச்சரவுகள் இம்மாபெரும் பண்ணையில் இருப்பது ஒன்றும் இயற்கை முரண்பாடு இல்லை. லட்சுமி மற்றும் செல்லம் ஆகிய இருவரின் சிக்கல்கள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து இருவரும் மிகவும் எதிரும் புதிருமாகவே செயல்பட்டுகொண்டிருந்தனர். மாபெரும் பண்ணைக்கு ஒற்றுமை என்பது மிக முக்கியமானது. இவர்கள் இருவரும் பலகாலம் பேசிகொள்ளாமலும் அவப்போது பேசிகொள்வதுமாக இருந்துவந்தார்கள். ஒருவேலை இருவரும் ஒன்றாக செயல்பட்டு இருந்தால், இந்த பண்ணையின் வளர்ச்சி பலமடங்கு பொருளாதார ரீதியில் வலுப்பெற்றிருக்கும் என்று பலருக்கும் நினைக்கத்தோன்றுகிறது. இருப்பினும் பல சான்றோர் பெருமக்கள் பெரிதாக விளங்கும் எதையும் பிரித்தாளும் முறைமூலம் நல்ல நிலையை எளிதில் எட்ட முடியும் என்ற கூற்றையும் சற்று இங்கே எண்ணிப்பார்க்க வேண்டும். இவர்களது எதிர்பதங்கள் யாவும் பண்ணை நிர்வாகத்தின் செயல்பாடுகளை பெரிதும் பாதிக்காதவாரு பண்ணைக்காரர் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். அதற்கு மாறாக தங்களுக்கென்று வேலையாட்களை பிரித்தும், உணவுகளை தனித்தனியாக தயாரித்து தலா ஒருமுறை பண்ணை வேலையாட்களுக்கு இட்டுவந்தார்கள். இச்சச்சரவுகளுக்கு இடையில் சில அரசியல் குறுக்கீட்டால் சரியான முறையில் உணவு தானியங்கள் பிரித்து கொடுக்கப் படவில்லை, இதனால் அவ்வப்போது பண்ணையில் சில சலசலப்புகள் உதித்து, பண்ணைகாரர் முன்னிலையில் ஊர் பெருமக்கள் பேச்சுவார்த்தையால் அவை மறைந்து வந்தன. பண்ணைகாரர் அவர்கள் 1987 ஆம் ஆண்டு பண்ணையின் கட்டிட தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, பெரிய மாமரத்தின் அருகில் நாற்பதுக்கு நாற்பது அடி அளவுகளைக்கொண்டு ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு அடிகல் நாட்டினார்கள். இந்த கட்டிடம் முழுமையாக விவசாயத்திற்கும், உழவு இயந்திரங்கள் பாதுகாப்பிற்கும் பயன்படும் வகையில் வடிவமைதார்கள். அதனை தொடர்ந்து பணிகள் ஆரம்பிக்கபட்டு, பின்னர் கட்டிட பணி மிகவும் மந்தமாகவே நடைபெற்றது.
No comments:
Post a Comment