மீன் தொட்டி

Monday, August 30, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 07

பண்ணையின் பிளவு

ஒரு வருடகாலம் இருந்த வளங்களை கொண்டு பண்ணையை சிறப்பாக நிர்வகித்து வந்தார் இருப்பினும் பண்ணைக்காரர் அவர்களிடமிருந்து முறையான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இராசப்பன் அவர்கள் 1995 ஆம் ஆண்டு பாகப்பிரிவினைக்கு பண்ணைக்காரர் அவர்களிடம் பரிந்துரை செய்தார்கள். பரிந்துரையை பரிசீலனை செய்த பண்ணைக்காரர் அவர்கள் பாகப்பிரிவினைக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து கூட்டத்தைக்கூட்டுமாறு உத்தரவிட்டார்கள். அதன்பொருட்டு கூட்டம் கூடுயது, கூட்டத்தை சில நாழிகை மவுனம் கவ்விகொண்டிருந்தது, மவுனத்தின் மரணபொழுதில் இராசப்பன் அவர்கள் புதுக்காடு மற்றும் செவிடன் காடுகளின் வடக்கு வேலியை கிழக்கு மேற்காகக்கொண்டு தெற்கில் இருக்கும் நிலப்பரப்பை யாரேனும் இருவரும், வடக்கில் இருக்கும் நிலப்பரப்பை யாரேனும் ஒருவரும் எடுத்துக்கொள்ளும்படி கூட்டத்தில் கூறினார்கள். இக்கூற்றை ஆமோதித்து பண்ணைக்காரர் அவர்கள் "நான் தனியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி புதுக்காடு, செவிடன் காடுகளின் வடக்கு வேலிக்கு பதிலாக தெற்கு வேலியை கிழக்கு மேற்காகக்கொண்டு நானே வடக்கில் நின்று கொள்ளுகிறேன் என்று கூறி தன் உரையை முடித்தார்கள்". இதற்கு இராசப்பன் மற்றும் சுவாமிக்கண்ணு அவர்கள் எவ்வித எதிர்ப்பும் கூறாது ஒருமனதாக இருவரும் ஆமோதித்தனர். இருப்பினும் கூட்டத்தில் சில சலசலப்புகள் எழுந்து அமர்ந்தது.

அதன்படி, கீழப்பட்டியில் உள்ள அடுக்குமாடி வீட்டை பண்ணைக்காரர் அவர்களுக்கும், கூரை வீட்டை சுவாமிக்கண்ணு அவர்களுக்கும் கொடுக்கவும் முடிவுசெய்யப்பட்டது, ஆனால் தற்பொழுது இராசப்பன் அவர்கள் தொடர்ந்து கூரை வீட்டிலே குடியிருக்கலாம் என்று கூட்டம் தீர்மானித்தது. சுவாமிக்கண்ணு எப்பொழுது இக்கூரை வீடு வேண்டுமென்று விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில் இராசப்பன் அவர்கள் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், களத்துபட்டியான் காட்டை மூன்றாக பிரித்து மூவரும் தலா ஒரு பகுதியை பெற்று தங்கள் வீடுகளை கட்டிகொள்ள வேண்டுமென்றும் பெரியக்கா அவர்கள் இவ்விடத்தில் உரைத்துக்கூறினார்.

இராசப்பன் மற்றும் சுவாமிக்கண்ணு ஆகிய இருவருக்கும் ஒன்றாக தெற்கே ஒதுக்கப்பட்டு ஆண்டிக்கோன்வயல்கள் முதன்மை வயல்களாக விளங்குமென்றும், வடக்கே பண்ணைக்காரர் அவர்களுக்கு நெற்களம் செட்டி காட்டில் அமைக்கப்பட்டு, பெரியகுளத்து வயல்கள் முதன்மை வயல்களாக விளங்குமென்றும் அறிவிக்கப்பட்டது. சுவாமிக்கண்ணு அவர்களின் கூற்றுக்கிணங்க ஆடுகளும், மாடுகளும் இரண்டாக மட்டுமே பிரிக்கப்பட்டது. உழவு இயந்திரம் "ஏருந்து-ட்ராக்டர்" மற்றும் ஆங்காங்கே உள்ள வீட்டுமனை இடங்களும் பண்ணைக்காரர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறாக அனைத்து பண்ணை சொத்துகளும் பிரிக்கப்பட்டது.

இதுவரை ஒரே தலைமை பாதையில் சீராக பயணித்து கொண்டிருந்த பண்ணையெனும் இரத்தினத்தேர் இருசிறுபாகமாக பிளவுபட்டு சற்று வேகமாக பயணிக்க தொடங்கியது. பிரிவு என்பது ஒரு இயற்கை விதிதானே, அதனை தடுத்து அணையிட யாரும் உண்டோ!! இப்பண்ணை பல பாகப்பிரிவினைகளைக் கடந்து வந்தபோதிலும் இப்பாகப்பிரிவினையால் 1995 ஆம் ஆண்டு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக அமைந்தது. பண்ணைக்காரர் அவர்களின் ஆலோசணைபடி அவரது நெற்களம் செட்டி காட்டில் சிறப்பாக அமைக்கப்பட்டு, பெரிய பண்ணையின் வேளாண்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த காலக்கட்டத்தில் சந்திர சேகர், இரவி, அமுதா ஆகிய மூவரும் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வை எதிர்நோக்கியிருந்ததால் பெருஞ்சிரமத்திற்கு ஆளானார்கள். தேர்வையடுத்து அமுதாவின் படிப்பு நிறுத்தப்பட்டு வீட்டு வேலைகளை கவனிக்க அறிவுருத்தப்பட்டது.


இராசப்பன் அவர்களின் பண்ணை நிர்வாகம்


இராசப்பன் அவர்கள் தலைமையில் பூர்வீக நெற்களமான தெற்கிக்களதில் பண்ணைப்பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதற்கான அடிப்படைதேவைகள் சற்று இல்லாது காணப்பட்டது. உழவு செய்வதற்கு கலப்பை மற்றும் அதனை சார்ந்த உபகரணங்களும் இல்லை, ஒரு இணை மாடுகள் மட்டுமே பாகப்பிரிவினையில் வழங்கப்பட்டது. அந்த கடின காலங்களில் ஏர்களும், உழவு மாடுகளும் இரவலாக பெறப்பட்டு அந்த விவசாய ஆண்டை வெற்றிகரமாக எதிர்கொண்டார். இராசப்பன் அவர்கள் பண்ணையின் தலைமை பொறுப்பேற்று முதல் பெரும்பணியாக பல காலங்கள் கிடப்பிலிடப்பட்ட களத்து வீட்டு கட்டிடத்தை ஒரு சில மாற்றங்களை கொண்டு குறுகியகாலத்தில் பூர்த்தி செய்தார்.


அதனையடுத்து தீர்க்கமாக சிந்தித்தும், அனுபவமிக்கவர்களிடம் ஆலோசிக்கப்பட்டும், அனைத்து தரப்புகளிலும் உற்று ஆராய்ந்து பல மாற்றங்களை செய்து பண்ணையின் சீரான வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். முதற்கட்டமாக ஏர் கலப்பைகளை உலோகத்தில் வடிவமைத்து பயன்படுத்தபட்டது. ஏர் உழவு இணை மாடுகளுக்காக மோகன்ராய்-பிள்ளைக்குட்டை ஆகிய இருமாடுகளையும் அபுத்தாவின் ஆணைப்படி, பண்ணைக்காரரிடமிருந்து ரூபாய் 5001 க்கு வாங்கப்பட்டும், செர்சி-நொண்டி மற்றும் அதிவேக மாடுகளான காரி-மயிலை ஆகிய இரு இணை மாடுகளை வெளியிலிருந்தும், குட்லா-சோழா மற்றும் வெள்ளைகரா-கத்தி ஆகிய இரு இணை மாடுகளை தம் பண்ணை மாட்டுக்கிடையிலேயே [பட்டி என்றும் கூறுவர்] பெற்றும், முதல் இணை மாடுகளான பெரியவண்டி மாடுகள் உட்பட ஆக மொத்தம் ஆறு இணை மாடுகளை ஆயத்தம் செய்து பண்ணையில் இணைக்கப்பட்டு அனைத்து ஏர்களுக்கும் உலோக கலப்பைகளை வடிவமைக்கபட்டும் அதிக வழுவுடைய தொடகயிறுகளை கொண்டும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தருணத்தில் பண்ணையின் அடிப்படை தேவைகள் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டது. மழையின் அளவு நன்றாக இருந்ததால் விளைச்சலும் நன்றாகவே இருந்தது. இராசப்பன் அவர்கள் வைத்திகடை தீனியில்லாது வீடுதிரும்ப மாட்டார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை தன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொருவரும் மாலைபொழுதில் அவரின் வருகைக்கு காத்து நிற்பார்கள். ஆதிகாலம் முதல் குளத்து நீர்பாசனம் பண்ணையின் சம்மதம் பெற்றே ஓட்டிசெல்வது வழக்கம். இருப்பினும் குளத்து நீர் நேரப்பகுப்பு காரணமாக பாகப்பிரிவிணைக்குப்பிறகு ஒரு சிக்கலான பிரச்சனை [பொலவம்] 1998 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் நாள் களத்தில் தோன்றி எதிர்கொள்ளப்பட்டது. இப்பிரச்சனையால் மாபெரும் வெற்றி பாதையில் சென்று கொண்டிருந்த பண்ணைக்கு அனைத்து மக்களும் உட்பொருள் அறியாமல் எதிராக செயல்பட தொடங்கினார்கள். இதனால் சில குறைகள் இருப்பினும் பல நன்மைகளை கற்றுத்தந்து ஒருபடி உயரத்தை எட்டுவதற்கும், சில பொது வேலைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இருந்தது.


வளர்ச்சி பாதையில் பண்ணை


அடுத்தகட்டமாக நீர் ஆதாரங்களை தேடும் பணியில் பண்ணை இறங்கியது. களத்து கிணறு பண்ணைகாரர் காலத்திலேயே சில வருடங்கள் நீரற்று வற்றி இருந்தது. அதன்பிறகு கிணற்றில் சுற்றடித்தளம் அமைத்து 11 அடி ஆழம் வெட்டப்பட்டு தோணியின் தேவையை பூர்த்தி செய்து வழிவகை செய்தார். அதே நேரத்தில் 1977 ஆண்டு வெள்ளப்பெருக்கில் அனைத்து குளங்களும் உடைப்பு ஏற்பட்டதனால் பயன்பாட்டில் இல்லாத பெரிய கிணற்றை, செப்பணிடப்பட்டும் தூர்வாரப்பட்டும், அதனை தொடர்ந்து ஒப்பந்தத்தின் அடிபடையிலே ஒரு பகுதியை சுமார் 20 அடி ஆழம் வெட்டப்பட்டது. இருபினும் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. அதன்பிறகு கிழக்கி கிணற்றை ஒப்பந்ததின் பெயரிலும், களத்து கிணற்றை பண்ணையே ஏற்று ஆழ்படுத்த தீர்மானம் செய்யப்பட்டது. கிழக்கி கிணறு சுமார் 25 அடிகள் வெட்டப்பட்டு மொத்தம் 72 அடி ஆழத்தையும் 7 பக்கவாட்டு ஆழ்துளைகளையும் கொண்டுள்ளது. களத்து கிணறு பண்ணையின் பொறுபிலேயே வெட்டுவதற்கு காரணமாக அபுத்தா இருந்தார், அவரது சொல்வாக்கானது தனது மரணத்திற்கு பிறகே இந்த கிணறை ஆழ்படுத்தும் ஆலோசணையை உங்கள் மனதில் கொள்ளுங்கள் என்பதாகும். அதற்கு ஏற்றவாறு இயந்திரப்பொறி அறையின் உறுதியான கிழக்குப்பக்க சுவர் மிகச் சரியாக கிணற்று கட்டிடத்தின் மேல் அமைந்திருந்தது இத் திட்டத்திற்கு பெரும் சிக்கலாக இருந்தது. இவ்வறை மூக்காண்டிக்கோனாரால் 1950 ஆம் ஆண்டு கட்டப்பட்டது குறிப்பிடதக்கது. இருபினும் இராசப்பன் அவர்கள் உறுதிதன்மையை சில மாதகாலம் உற்று ஆராய்ந்து ஒரு வழியாக திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்தார்கள். இத்திட்டதில் பல சுவாரசியங்களை அனுபவித்தும், பல இடர்பாடுகளை நிவர்த்தி செய்தும் இக்கிணறு 78 அடி ஆழத்தையும், 5 பக்கவாட்டு ஆழ்துளைகள் தலா 200 அடிகளை கொண்டும் இத்திட்டம் மிக கவனமாக நிறைவேற்றப்பட்டது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் குளத்து வாரிகளை நன்கு பராமரித்து வந்தார். அனைத்து கிணறுகளையும் இணைப்பதற்கும், அதிவேகபாசன முறையை அமுல் படுத்துவதற்கு இரட்டை பாதாள பாசன குழாய்களை அமைத்தார். இந்த இரட்டை பாசன குழாய்களால் ஒரே நேரத்தில் இரண்டு கிணறுகளின் நீர் எந்த ஒரு புள்ளியிலும் பெறப்பட்டு மிக துரிதமாக வயலுக்கு பாசனம் செய்யப்பட்டு நீர்பாசன முறையில் மாபெரும் புரட்சியை கண்டார். இயந்திரப்பொறியின் [முகட்டி-மோட்டர்] நிலையான ஒரே இடத்தில் கிணற்றுகுள்ளோ அல்லது வெளியிலோ அமைக்கப்பட்டிருந்த மேடைகளினால் முகட்டிகளின் செயல்பாடுகள் அதிக இடர்பாடுகளினால் செயல்திறன் முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையான மேடைகளை களைந்து பளுத்தூக்கி இயந்திரம் மூலம் இயந்திரப்பொறிகளை தொங்கவிடும் முறையை அறிமுகம் செய்து ஓரளவு பயனை பெறப்பட்டது. இதன் பயனாக மிக எளிதில் முகட்டியை கிணற்று நீரின் அளவிற்கு ஏற்றவாறு அனுசரித்து வைத்துகொள்ள முடிந்தது.

பின்னர் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தின் உச்சமாக நீர்மூழ்கி முகட்டிகளை அறிமுகம் செய்து விவசாயத்தின் உற்பத்தியை பன்மடங்கு பெருக்க வழிவகுத்தார். இராசப்பன் அவர்களின் நெருங்கிய மற்றும் முக்கிய ஆலோசகராக உசிலம்பட்டி திரு. சின்னையா அவர்கள் இருந்து வருகின்றார். இவர் தன் தாயாரின் தங்கை மகன் மற்றும் இவரும் தமிழக அரசு வருவாய் துறையில் கிராம நிருவாக அலுவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. இவர் தக்க நேரத்தில் சரியான, தீர்க்கமான, அதிலுள்ள ஏற்றதாழ்வுகளை கண்டறிந்து முடிவுகளை தீர்மானிப்பதில் சிறந்தவர் மற்றும் தன் சுயமரியாதையை எந்த சூழ்நிலையிலும் காத்துகொள்பவர். புதிய முயற்சியாக 2000 ஆம் ஆண்டு ஒரு உழவு இயந்திரம் வாங்குவதற்கு திட்டம் தீட்டப்பட்டு மகிந்திரா பி-275 ரக இயந்திரத்தை வாங்கினார். உழவு இயந்திரம் பண்ணையை அடைந்த குறுகிய காலங்களிலே குட்லா-உழவுமாடு யாரும் அறியாது தீடீரென களத்தில் இறந்துபோனது, மாட்டின் இறப்பு பண்ணையை பெருந்துயரத்தில் ஆழ்த்தியது. சுமார் ஒரு வருட காலம் ஏருந்து செம்மையாக பயன்படுத்தப்பட்டதன் விளைவாக பெருவாரியான தரிசு நிலங்களை விவசாய நிலத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகு பண்ணையில் அனைவரின் ஒத்த முடிவுடன் உழவு இயந்திரம் விற்பனை செய்யப்பட்டது. பண்ணையில் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் மற்றும் மாடுகள் ஆகிய கால்நடைகள் பெரும் பங்குவகுகின்றன. பண்ணையின் சீரான இயற்கை சுழற்சிக்கு கால்நடைகள் மிகமுக்கியம் ஆனால் அவற்றை பராமரிப்பது மிக கடினமான வேலை, இருபினும் இடையர்களின் தொன்மையான தொழில் ஆடுமாடுகளை வளர்ப்பது, அதனைபராமரித்து, அதில்வரும் வருமானத்தை கொண்டு வாழ்வதுமாக இருந்தது. இராசப்பன் அவர்கள் ஒரு கால்நடை மருத்துவரை நியமனம் செய்து, குறிப்பிட்ட காலசுழற்சியில் ஆய்வுசெய்து, கால்நடைகளின் நோய்நொடிகளை விரட்டி, மருத்துவரின் ஆலோசனைபடி ஆடுகளுக்கு கூரைகளுடன் கூடிய கொட்டங்களை அமைத்தும் பனிபொழிவு, மழைபொழிவு மற்றும் சீதோசன சீற்றம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் திட்டத்தை நிறைவேற்றினார்.

இராசப்பன் அவர்கள் பெரும் பண்ணையை நிர்வகித்தபோதிலும் குடியிருப்பது கூரை வீடுதான் என்றும், இவர் ஈட்டும் பொருளும் பணமும் பிள்ளைகளை படிக்கவைத்து வீண்செலவு செய்கிறார் என்றும் ஊர் ஊளையிட்டது. இவர் எதிர்காலத்தை நன்றாக கணித்து ஊரின் ஓலத்தை லட்சியம் செய்யாது தன்பணியை தொடர்ந்து வந்தார். தொன்மையான கூரை வீடு ஒரு அறிய பொருளாகவும் அதனை தன் வாழ்நாளில் காக்கவேண்டும் என்று எண்ணி வந்தார் ஆனால் இயற்கைக்கு எதிராக இவ்வுலகில் என்ன இருக்கிறது? தொடக்கம் இருந்தால் முடிவு இருந்துதானே ஆகவேண்டும். இக்கூரை வீடு தன் வயதான காலத்தில் 2005 ஆம் ஆண்டு வீசிய கடும் புயல் மழையில் சிக்கி சின்னாபின்னமானது. இராசப்பன் அவர்கள் கட்டட நிபுணர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் மூலமாக ஆலோசிக்கபட்டு 2006 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கூரை வீடு இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய வீட்டிற்கு அடிகல் நாட்டினார்.

வீட்டின் வேலைகள் மிகசீரான வேகத்தில் தொடர்ந்து இருஅடுக்குமாடிகளை எட்டியது. வீட்டின் தோற்றம் மிக நன்றாக இருந்ததால், அத்தோற்றத்தை மேலும் வசீகரிக்க ஒரு அடுக்கு உயரம் உயர்த்த அனைவரின் ஒப்புதலைப்பெற்று இறுதியில் மூன்று அடுக்குகளையும், ஒரு தனியறை நான்காவது அடுக்கிலும் அமைத்து, ஒரு அடையாள சின்னமாக உருவெடுத்து அதில் பண்ணையின் சிறப்புமிக்கவர்களின் பெயர்களை கல்வெட்டில் பொறிக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதற்கிடையில் இராசப்பன் அவர்கள் தன் கிராம நிருவாக அலுவலர் பணியிலிருந்து 2007 ஆம் ஆண்டு சூன் மாதம் ஓய்வு பெற்றார்கள்.

No comments:

Post a Comment