மீன் தொட்டி

Tuesday, July 27, 2010

பண்ணையின் அடிப்படை விவசாயமுறை

பண்ணையின் முக்கிய விவசாயமாக நெல் உள்ளது. பண்ணை என்பது எல்லாவகையான பயிர்களையும் வேளாண்மை செய்வதுதான், இருந்தாலும் புவி தட்பவெப்பத்திற்கு ஏற்றவாறு பயிர்களை தேர்வுசெய்து வேளாண்மை செய்வது மிக நன்மை பயக்க கூடியதாக இருக்கும்.இப்பண்ணையில் நெல், கருஞ்சோளம், வரகு, பயறு, எள்ளு, கொள்ளு, உலுந்து, கடலை,சூரியகாந்தி போன்ற பயிர் வகைகளை பிரதான பருவகாலத்திலும், சோளம், பருத்தி, கத்தரி,வெண்டை, தக்காளி, மிளகாய், சீரகம், சோம்பு, முள்ளங்கி, சக்கரைவல்லி கிழங்கு மற்றும் போதுமான மழைபொழிவு இருந்தால் நெல்லும் கோடைகாலத்தில் பயிரிடபடுகின்றன. இதை தவிர கரும்பு அவ்வப்போது பயிரிடபட்டும், தென்னை, எலுமிச்சை, மா, புளி, கொய்யா, பனை நொங்கு, கொடிக்காய்பல்லி, இலந்தபழம் போன்றவைகள் வருடந்தோறும் பண்ணையில் கிடைக்கப்பெறுகின்றன. நெற்பயிர் விவசாயமுறை மட்டும் சற்று வேறுபட்டும், மற்ற பயிர் வகைகள் அனத்தும் கிட்டதட்ட ஒத்தமுறையை கொண்டுள்ளது. உலகில் பலபகுதிகளில் வெவ்வேறு விதமாக நெற்பயிர் விவசாயம் செய்யபட்டு வருகின்றது. ஆகையால் இந்த பண்ணையின் விவசாயமுறையை இங்கே குறிபிடவேண்டிய கட்டாயம் உள்ளது.

பண்ணையின் விவசாய நிலங்கள் பரந்து விரிந்து கிடப்பதால் விவசாய வேலையாட்களும்,நேரமும் அதிகளவில் தேவைபடுகின்றது. இந்த பண்ணையின் பசுமாடுகளை ஏரிலோ அல்லது விவசாய வேலைக்கோ பயன்படுத்த முற்றிலும் தடைசெய்யபட்டுள்ளது. ஆண்டிக்கோன் குளத்து புறகரையில் வீற்று அனைத்தையும் காத்து கொண்டிருக்கும் கருப்பசுவாமி திருக்கோயிலுக்கு காணிக்கையை செலுத்தி சுவாமியின் ஆசியை பெற்றபிறகே எந்த காரியத்தையும் பண்ணையில் செய்யபட்டுவருகின்றது. அதன்படி சுவாமியின் ஆசிபெற்று ஆவணி மாத பருவமழையை அனுசரித்து நாற்றங்காலை [நாத்தாங்கா] காளைமாடுகளை[உழவு மாடுகள்] ஏரில் பூட்டி தரிசு உழவு குறைந்தது இரண்டு ஓட்டு ஓட்டபடுகின்றது. உழவு ஓட்டும்பொழுது "ப்பா ப்பா" என்று வலத்துமாட்டை திருப்பவும், "த்தோ த்தோ" என்று இடத்துமாட்டை திருப்பவும் பண்னையில் ஏரோட்டுபவர்கள் பயன்படுத்துகின்றனர்.அதனையடுத்து எருக்கிழை, கொழிஞ்சி போன்ற காட்டுதழைகளையும், சத்தான குப்பை,சாணஎரு போன்றவைகளையும் இட்டு மீண்டும் இரண்டு ஓட்டு உழவு செய்து, வரப்புகளை நன்கு வெட்டி, தழைகள் அழுகுவதற்காக நீரின் அளவை குறையாதவண்ணம் பராமரிக்கபடுகின்றது. கடைசியாக இரண்டு ஓட்டு, தேவையென்றால் மேலும், உழவு செய்துபரம்புபலகை கொண்டு அனுபவமிக்கவர்களால் பரம்பு அடித்து நாற்றங்காலை சமபடுத்த படுகின்றது. அதநேரத்தில் பரம்பில் சீந்திகட்டி தேவையான சிறுவாய்கால்கள் நாற்றங்காலில் இடபடுகின்றது. இயந்திர உழவு நாற்றங்காலில் பயன்படுத்த தடையிருப்பதால் அனைத்து வேலைகளும் மாடுகளினால் மட்டுமே செய்ய படவேண்டும். பரம்பு அடித்த அதேநாள் தேவையான விதைநெல்லை நன்கு வெயிலில் காயவைத்து சிறு அளவாக நார்கோணியில் பிடித்து குளத்து நீரில் மூழ்கடிக்கபடுகிறது. தாமத மழையால் குளத்தில் தண்ணீர் இல்லாத காலங்களில் நல்ல கிணற்று நீரில் விதைநெல்லை வைக்கப்படும். பின்னர் ஒருநாள் கழித்து நீரிலிருந்து வெளியில் ஏறக்கட்டி ஈரம் காயாதவண்ணம் பர்த்து கொள்ளப் படுகினறது. அதற்குஅடுத்த நாள் நெல் நன்றாக பருவமடைந்திருந்தால் நாற்றங்காலில் போதுமான அளவு நீர்விட்டு நெல்லை பாவுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகினறது. பருவம் செய்த விதை நெல்லை எடுத்து சென்று நாற்றங்காளின் வரப்புகளில் வைத்து மிக சீரான ஒரே அளவாக நெல் பாவபடுகின்றது. பொதுவாக நெல் பாவும் வேலை மாலை பொழுதிலே நடைபெறுகின்றது.ஒருநாள் அப்படியே விட்டு, இரண்டாம் நாள் அதிகாலை கோழிகூவும் நேரத்தில் கங்கல் [நெல் பாவும்பொழுது விட்டநீர்] வெட்டபட்டு ஒருதுளி நீர் இல்லாது சீந்தியின் சிறுவாய்க்கால் மூலம் நாற்றங்காளில் இருந்து வடிக்கபடவேண்டும் இதனால் முளைத்துவரும் நெல் துளிருக்கு சூரியஒளிபட்டு பச்சையம் கிடைக்க வழிவகுக்கவும், அதிக நீரின் காரணமாக நெல் அழுகிவிடாமல் இருக்கவும் உதவிபுரிகிறது. இருபினும் நாற்றங்கால் சேற்றை காயாதவாறு நீர்விட்டு பேணுதல் வேண்டும். இவ்வாறு நாற்றங்காலில் பயிர் விவசாயம் செய்யபடுகின்றது.



அதனையடுத்து பயிரின் அளவை பொருத்து வயல்களை நீர்விட்டு இயந்திரத்தாலோ அல்லது ஏரிலோ தரிசு உழவு குறைந்தது இரண்டு ஓட்டு ஓட்டபட்டு பூவரசு, வாதமடக்கி, வேம்பு போன்ற மரத்தழைகளை வயல்களிலிட்டு மீண்டும் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு ஓட்டு உழவு செய்து தழைகளை சேற்றில் அமுக்கபடுகின்றது. தழைகளையும் வயல் சேற்றையும் காயாமலிருக்க தேவையான தண்ணீர் விடபடுகின்றது. அதைதொடர்ந்து வரப்பு வெட்டும் வேலையும் முடிக்கப்படுகின்றது. வயல் வரப்பு வெட்டுக்கு இன்றும் தெய்வதிரு. கருப்பனே முதல் தரவரிசை பட்டியலில் இருகின்றார். வயல்களை பண்ணையாட்க்களின் அளவையும் பயிர் கட்டுகளின் அளவையும் கொண்டு நடவுக்கு தொழி உழவு செய்யபட்டு, மேலும் தொழியின் கூழ்மத்தை அதிகரிப்பதற்காக சேற்சுழற்றி [பட்லர்] கொண்டு இரண்டு ஓட்டு ஓட்டபடுகின்றது. தொழியில் நடவுக்கு முன்பு சீரான அடியுரம் [டிஏபி] இடபடுகிறது. அதனையடுத்து நாற்றங்கால் நெற்பயிர்களை பிடுங்கி அதை சிறுசிறு கத்தையாக [பயிர் முடி, நூறு முடிகள் கொண்டது ஒரு கட்டு பயிர் ஆகும்] கட்ட வேண்டும். அதை கட்டுவதற்கு வைக்கோல் தழுக்கு பயன்படுத்தபடுகின்றது. பயிர்முடிகளை ஆட்கள் மூலமாகவோ அல்லது மாட்டுவண்டியிலோ கொண்டு சென்று பயிர் நடவு வயல்களில் சீரான இடைவெளியில் பயிர் முடிகளை விளம்பவேண்டும். பொம்பளையாட்கள் தொழிவயலில் நேர்ந்து பிடித்து, வேலைக் களைபிலிருந்து மீள பல நாட்டுபுற பாடல்களை பாடி பயிர் நடவு செய்யபடுகின்றது. இந்த நடவிற்கு இளநடவு என்று பெயர். இளநடவு சற்று வேர்பிடித்து வளரும் வரை மிதமான அளவே தண்ணீர் பாய்ச்சபட்டு வருகின்றது. இளம் பயிர்ருக்கு தண்ணீர் அதிகமாக இருந்தால் சூரியஒளி இல்லாது வேர் பிடிக்க இயலாது அழுகி விடும். நெற்பயிர்கள் பச்சையிட்டு நன்றாக வளர தண்ணீரின் அளவை குறையாது பேணப்படுகின்றது. பயிரின் காலத்தை பொறுத்து பலகட்டங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கபட்டு, பயிரின் தேவைகேற்ப இரசாயண உரங்களை [யூரியா, பொட்டாஷ்யம், டிஏபி] சரியான விகிதமுறையில் கலந்து இடப்படுகின்றன. நெற்பயிர்களை பாதித்து இடையிடையே வளர்ந்துவரும் நெத்துவரை மற்றும் அதை போன்ற களைகளை எடுத்தெறியபடுகிறது. நெற்பயிர்கள் பூக்களுடன் கூடிய பூட்டுகளை விட ஆரம்பிகின்றன [பூட்டு என்பது நெற்குலையின் இளம்பருவம்]. இந்த தருணத்தில் நெல்லின் வாய் காலை பொழுதில் திறந்து சூரிய ஒளிமூலம் நெற்பாலை உற்பத்தி செய்து இரவு நேரத்தில் மூடப்பட்டு காணப்படும் ஆகையால் இந்த நேரத்தில் மழைபெய்வது உகந்ததில்லை. நெல்மணிகள் திடவூட்டமாக இருக்க மணிசத்தான சாம்பல் சத்து அல்லது இராசாயண உரம் பொட்டாஷ்யம் அதிக விகிதத்தில் இடப்படுகின்றன. நெல்மணிகள் பழுப்பு நிறம் வர ஆரம்பித்து பின்னர் அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கும். பண்ணையாட்கள் கறுக்கருவால் கொண்டு நெற்கதிர்களை அறுத்து அரிகாய்சலாக வயலில் ஓரிரு நாட்கள் விடபடுகின்றது. அறுவடைக்கு தயாராய் இருக்கும் கதிரை தாள் என்றும் கூறபடுகிறது. வயலில் நன்கு காய்ந்த நெற்கதிர் அரிகளை களத்தின் தூரத்தை பொறுத்து கன்னி கத்தையாகவோ அல்லது தலைகட்டாகவோ கட்டபடுகின்றது. கன்னிகத்தைகளை வண்டிகள் மூலமாகவும், தலைகட்டுகளை வேலையாட்கள் மூலமாகவும் எடுத்து சென்று களத்திலிட மிக ஏதுவாக இருக்கும். கட்டுகளை தலைகட்டுகளாகவோ அல்லது மாட்டு வண்டியிலோ அல்லது இழுவுந்திலோ [டிராக்டர்] ஏற்றி களத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

பழங்காலதில் நெற்கதிரை தலையடியாக [ஆட்கள் மூலமாக] அடித்து தழுக்கை [கசங்காத வைக்கோல்] பொழியிலிட்டு புணையல் விடப்படும் [மாடுகளை புணைந்து மிதிக்க விடப்படுவதற்கு புணையல் என்றும் வட்டமாக தழுக்கை இடுவதற்கு பொழி என்றும் பெயர்வழக்கத்தில் உள்ளது]. புணையலை நிறுத்தி பொழியை அலசி வைக்கோலை நன்கு வெயிலில் உணர்த்தி பின்னர் அவ்வைக்கோலை போரிட்டு மாட்டு தீவனத்திற்காக பாதுகாக்கபடுகின்றது. வைக்கோலுக்கு வக்கை, கூலம் போன்ற பெயர்களிலும் இப்பண்ணையில் அழைக்கபடுகின்றன. தழுக்கிலிருந்து கிடைத்த பொட்டுகளை தூற்றி நெல்லுகளை பிரித்து எடுக்கபடுகிறது. நெல்லும் வைக்கோல்துகள்களும் கலந்த கலவையை பொட்டு எனபர். விவசாய துறையின் வளர்ச்சிகேற்ப நவீன இயந்திரங்கள் தற்பொழுது பயன்படுத்த படுகின்றன. நெற்கதிர் கட்டுகளை பிரித்து அரியரியாக கதிர் அடிக்கும் இயந்திரத்தில் விட்டு வைக்கோல், நெல், பதர், பொட்டு போன்றவைகளை அதிகபளு கொண்ட பற்சக்கர உருளை மற்றும் உயரழுத்த காற்றாடிகள் மூலமாக தனித் தனியாக ஒரே தருணத்தில் பிரித்தெடுக்கப்படுகின்றது. நெற்கதிர் அறிகள் கதிர் அடிக்கும் இயந்திரத்தின் ஒருபுரம் அதிவேகத்தில் உட்செலுத்தி அதே வேகத்தில் மறுபுரம் வைக்கோல் வெளி கொணரபடுவதால் அதிக வேலையாட்கள் ஒரே நேரத்தில் தேவைபடுகிறது. இதில் வைக்கோல் பிரிவு மக்கள் படும்பாடு கொஞ்சம் நஞ்சமில்லை அவ்வளவு கடுமையான வேலையாகும். இதற்காக இருமடங்கு ஆட்களை அப்பிரிவில் நியமிக்கப்பட்டு வேலைபழுவை பகிர்ந்தளித்து உடனடியாக வைக்கோலை போருக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கோல்போர் அமைக்க படுகின்றது. ஆக கதிர் அடிக்கும் இயந்திரம் மூலம் வேலை மிக எளிதில் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. இதற்கும் ஒருபடி உயர்ந்து கதிரை அறுத்து வயலிலேயே அடிக்கும் இயந்திரத்திரமும் அண்மைகாலமாக பண்ணையில் பயன்படுத்த படுகின்றது. இதில் வைக்கோல் மேலாண்மை சற்று சிரமம்மாக கருதப்படுகின்றது, வைக்கோலானது சரிவர களத்தை வந்தடைவதில்லை. மற்றபடி இவ்வேலையிலில் உள்ள எளிமையை எதிலும் காண இயலாது ஆனால் இந்த கதிர் அறுக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு வயலின் தன்மை நன்கு காய்ந்து இருத்தல் நெற்தாள் சாயாதிருத்தல் போன்ற பல நிபந்தனைகளும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவ்வாறு நெற்பயிர் விவசாயம் பண்ணையில் செய்யபடுகின்றது.

பருத்தி, கடலை, சோளம், கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், கருஞ்சோளம், வரகு, பயறு, எள்ளு, கொள்ளு, உலுந்து, சூரியகாந்தி, கரும்பு, சீரகம், சோம்பு, முள்ளங்கி, சக்கரைவல்லி கிழங்கு போன்ற மற்ற விவசாய பயிர்களுக்கும் அவற்றின் தன்மைகேற்ப ஒருபுடி புழுதி கால்புடி அளவிற்கு உழவு செய்து நீர் பாய்ச்சலுக்கு ஏற்றவாறு பார்களையும் பாத்திகளையும் அமைத்து பயிராக நடவு செய்தோ அல்லது விதைகளாக விதைத்தோ விவசாய மேற்கொள்ளப்படுகின்றது. செழித்த மழை கலாங்களில் மானாவாரியாக விதைகளை விதைத்து இரண்டு அல்லது மூன்று ஓட்டு உழவு செய்து விவசாயம் செய்யபடுகின்றது. மானாவாரி விவசாயமென்பது பயிருக்கு தேவையான நீர் வான்மழை மூலமாகவே கிடைக்க பெறுவதாகும், மழை பொய்த்து, மனித முயற்சியும் பொய்த்துப்போனால் விவசாயம் கண்டிப்பாக வீடுவந்து சேராது. இந்த அடிப்படை விவசாயமுறையை பண்ணைமட்டுமல்லாது இச்சுற்று வட்டாரமக்களும் இதேமுறையைத்தான் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றார்கள். பண்ணையில் பிறந்த மற்றும் புகுந்த அனைவரும் உழவுதொழிலில் நன்கு கைதேர்ந்தவர்கள் ஆவார்கள். எந்தவித பாகுபாடின்றி அனைவரும் தங்களின் முழு உழைப்பையும் ஒத்துழைப்பையும் பண்ணைக்கு அர்பணித்து பெருமையை சேர்த்து கொண்டவர்கள்தான்.

பொறியாளர் கிருஷ்ணன் அவர்களின் மோழியின் ஆழம் என்ற நூலில் இருந்து ஒரு பகுதியான பண்ணையின் டிப்படை விவசாயம் முறை உங்களுக்காக.......

No comments:

Post a Comment