மீன் தொட்டி

Sunday, July 4, 2010

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நா நாழி - அவ்வையாரின் அறிவியல் விதி

அவ்வையார் பாடல்களிலே "பாஸ்கலின் விதி"என்னும் அறிவியல் கோட்பாடு விதிகளை யெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நன்கு தெரிந்து வைத்திருந்ததிலிருந்து தமிழ் சமுதாயம் அறிவியல் முன்னோடி என்பதை உணர வைத்து இருகிறார்.

தென்பாண்டி நாட்டில் ஏகன் என்பவன் தன் மனைவி வள்ளியிடம், "வயலுக்குச் சென்று வருகிறேன். விதை வரகைக் குற்றிச் சோறாக்கி வை!" எனக் கூறிவிட்டு வயலுக்குச் சென்றான். வள்ளியோ, ஆற்றின் மணலில் சுழித்துக்கொண்டு கிடக்கும் வீளை (சிறுதவளை)யைப் பிடித்துக் குழம்பாக்கி வரகரிசிச் சோறு சமைத்தாள். தான் உண்டுவிட்டுத் தன் கணவனுக்கும் வைக்கலாம் என்றிருந்தவள், வீளைக்கறிச் சுவையும் விதை வரகுச் சோற்றின் சுவையும் அவளை மீண்டும் மீண்டும் உண்ணத்தூண்டியதால், கணவனுக்கு மிச்சம் வைக்காது எல்லாவற்றையும் உண்டு தீர்த்துவிட்டாள்.

உண்ட களைப்பால் தனது வீட்டின் முன் உள்ள வாகை மரநிழலில் அயர்ந்து தூங்கிவிட்டாள். உழுத களைப்பும் பசியும் கொண்ட ஏகன் வந்து பார்த்தான். தனக்கு மிச்சம் வைக்காது உண்டுவிட்டுச் சட்டி, பானைகளைக் கூடக் கழுவாமல் படுத்துறங்கும் மனைவியைத் தார்க்கோலால் அடித்து, உதைத்து அவளது தாயாரின் வீட்டுக்கு விரட்டினான். பக்கத்து ஊரான தன் தாயாரின் ஊருக்குச் சென்றால், "கணவனுக்கு மிச்சம் வைக்காமல் உண்டவளாயிற்றே! என்று நம்மை எல்லோரும் இகழ்வார்களே! அங்கு செல்வதா? வேண்டாமா?" என யோசித்த வள்ளி, செல்லும் வழி இடையே ஒரு மாமர நிழலில் அமர்ந்தாள்.

"சோற்றை உண்டதற்காக மனைவியைக் கொடுமை செய்து அடித்தவனாயிற்றே! என ஊரார் நம்மைப் பார்த்து இகழ்வார்களே!" என்று ஏகனும் நினைத்து அவளைத் தேடிச் சென்றான். வள்ளி அங்கு அமர்ந்திருப்பதைக் கண்ட ஏகன், அவளிடம் சென்று தன்னோடு வருமாறு கெஞ்சினான். அப்போது, அங்கு ஒளவையார் வந்தார். இருவரிடமும் நடந்தவை பற்றி வினவினார். உடனே வள்ளி ஓ...வென அழுதாள்.

"வீளைக் கறியே! எம்வ் வெதை வரகாஞ்சோறே!
வாகை நெழலே! - வள்ளியோட
வாழ்க்கையக் கெடுத்தியே...!"

என்று அவள் பாடி அழுதாள்.

"ஊருக்குந் தெரியாது! யாருக்குந் தெரியாது!
உழுத மகென் வயிறு உலையாக் கொதிச்சகொதி
தாருக்குச்சி தானே ஆத்தா - ஏகனை இப்போத்
தரிசா ஆக்கிருச்சி"

என்று ஏகனும் அவன் பங்குக்குப் பாடி முடித்தான். ஒளவையார், கணவன்-மனைவி இருவரையும் தேற்றினார். வள்ளியிடம் சென்று, தீர்ப்பாகத் தன் பாடலைப் பதிவு செய்தார்.

"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நா நாழி - தோழி
நிதியும் நின் கணவனும் நேர்படினும்; தத்தம்
விதியின் பயனே பயன்"


இப்பாடலின் கருத்தாவது, ஒருபடி உமியையோ, தவிட்டையோ, தானியத்தையோ கூட்டிக் குறைத்து அளந்துவிடலாம். ஆனால், ஆழ் கடலில் கொண்டுபோய் நிறை நாழியை (படியை) எவ்வளவுதான் ஆழ அமுக்கி அளந்தாலும் ஒரு படி தண்ணீர்தான் இருக்கும். அவ்வாறே, நிறைவான செல்வமும், பண்புடைய கணவனும் கிடைத்தாலும், தாம் தாம் செய்த வினையின் தன்மைக் கேற்றவாறே, தாம் பெற்ற செல்வத்தாலும், கணவராலும் பயனடைவர். ஊழ்வினையைப் பொறுத்தே பயனடைய முடியும். அதுபோல, கணவன், மனைவியாகிய நீங்கள் உங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருங்கள்; ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள்; உங்கள் பிரச்னைகளில் அடுத்தவர்களுக்கு இடங்கொடுக்காதீர்கள்; ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இன்றி அன்பு காட்டுங்கள்; கணவன், மனைவி இருவர் மட்டுமே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்து ஒத்த கருத்தாய் முடிவு செய்யுங்கள். வாழ்வில் உங்களுக்கு ஒரு குறையும் நேராது என்பதாக இப்பாடல் கருத்து அமைகிறது.

குறிப்பு: ''பாஸ்கலின் விதி''' ''முழுவதும் திரவம் நிரப்பட்ட மூடிய கலனில் கொடுக்கப்படும் அழுத்தமானது கலனிலுள் அனைத்து பகுதியிலும் சம அளவில் இருக்கும். அவ்வழுத்தத்தால் உருவாகும் விசை கலனில் சமபரப்பில் சம அளவில் இருப்பதோடு கலனின் உட்பரப்பிற்க்கு செங்குத்தாகவும் அமையும்'' என்பதாகும்.

3 comments:

  1. ஆஹா. அருமையான பதிவு.
    படித்துப் பாருங்கள். உங்கள் பெயரையும் இந்த பதிவில் பதிவு செய்யுங்கள். நன்கு எழுதுபவர்களை உற்சாகப்படுத்துங்கள். இவ்வளவு அருமையாக எழுதுகிறார், Followers 16 பேர் தான் இருக்கிறார்கள்.
    Kindly remove word verification.

    ReplyDelete
  2. என்ன அருமையான பதிவு

    ReplyDelete
  3. அருமையான பதிவு 👌👏👏👏

    ReplyDelete