நீயற்ற பொழுதுகளின்
கனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்
உறக்கம் தொலைத்த இரவுகளை..
உன்னை நினைத்துக் கொண்ட தருணங்களை..உன்னோடிருந்த நாட்களை....
உன்னைப் போலிருந்த மனிதர்களை...
சொற்களின் இடுக்குகளில்
கசியத் தொடங்குகிறது
விழிகளின் ஈரம்..
கண்கள் தவிர்த்து
காற்றிடம் பேசுமென்னை
முன்னெப்போதுமில்லாத
பரிவின் முகம் கொண்டு
பார்த்துக் கொண்டிருக்கிறாய் நீ...
விடைபெறும் வேளையில்..
மழையின் குரலில்
அழைக்கிறாய் என்னை..
நான்
எத்தனை சொல்லியும் தீராக் காதலை
ஒற்றைச் சொல்லில் நிரப்பி விளிக்கிறாய்..
எங்கோ
கிளைகளுதிர்த்த பூக்களில் ஒன்று
மீண்டும் பூக்கிறது
மனதின் ஆழத்தில்.
மிக அழகான வரிகள்... கவிதை அருமை!
ReplyDelete