மீன் தொட்டி

Thursday, September 30, 2010

வாழ்க்கை - பகவத்கீதை

1. வாழ்க்கை ஒரு சவால், அதனை சந்தியுங்கள்.

2. வாழ்க்கை ஒரு பரிசு, அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம், அதனை மேற்கொள்ளுங்கள்.

4. வாழ்க்கை ஒரு சோகம், அதனை கடந்து வாருங்கள்.

5. வாழ்க்கை ஒரு துயரம், அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

6. வாழ்க்கை ஒரு கடமை, அதனை நிறைவேற்றுகள்.

7. வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதனை விளையாடுங்கள்.

8. வாழ்க்கை ஒரு வினோதம், அதனை கண்டறியுங்கள்.

9. வாழ்க்கை ஒரு பாடல், அதனை பாடுங்கள்.

10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம், அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

11. வாழ்க்கை ஒரு பயணம், அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி, அதனை நிறைவேற்றுங்கள்.

13. வாழ்க்கை ஒரு காதல், அதனை அனுபவியுங்கள்.

14. வாழ்க்கை ஒரு அழகு, அதனை ஆராதியுங்கள்.

15. வாழ்க்கை ஒரு உணர்வு, அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

16. வாழ்க்கை ஒரு போராட்டம், அதனை எதிர்கொள்ளுங்கள்.

17. வாழ்க்கை ஒரு குழப்பம், அதனை விடைகாணுங்கள்.

18. வாழ்க்கை ஒரு இலக்கு, அதனை எட்டிப் பிடியுங்கள்.

Thursday, September 16, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - இறுதி பகுதி 10


அடைக்கப்பன் அவர்களின் மறைவு

சில ஆண்டு காலமாக உடல் நலம் குன்றி திருச்சி சிவசக்தி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற சென்று வந்தார். ஒருநாள் இவரின் மோசமான உடல்நிலை காரணமாக 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டு, ஒரு வாரகாலம் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் கண்டு பின்னர் அதே மாதம் 31 ஆம் நாள் இரவு 10:00 மணியளவில் யாரும் எதிர்பாராது தீடீர்ரென மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இந்த சரித்திர சக்ரவர்த்தியின் மறைவால் ஒட்டுமொத்த மக்களும் பண்ணையும் பெரும் துக்க துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு ஈடுஇணையற்ற இழப்பை ஏற்படுத்தியது. இவர் தன் வாழ்நாளில் ஆற்றிய செம்மையான பல அற்புத திட்டங்களினாலும் எல்லோரையும் சமமாக எண்ணும் உயரிய பண்பினாலும் ஏராளமான மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார். தனது வாழ்க்கை பயணத்தில் எண்ணற்ற வெற்றிகளையும் இடர்பாடுகளையும் கொண்ட அவரது அபாரமான அனுபவத்தை இந்த இளயதலைமுறைக்கும் சமுதாயத்திற்கும் விட்டு சென்றார். இச்சமுதாயம் தங்களது வாழ்க்கையை செம்மைப் படுத்திகொள்ள அவரது வாழ்க்கைமுறையும் அனுபவமும் அமைய வேண்டுமென்பது அவரது கடைசிகால விருப்பமாக இருந்தது.

பண்ணையின் வேர்களும் துளிர்களும்

பண்ணையின் மனநிறைவும் வருத்தமும்

பெருவாரியான மனித குடும்பங்களை கொண்ட இக்கிராமத்தையும் இதனை சார்ந்த கிராமங்களையும் இயற்கை வழிகொண்டு ஏராளமான செயல்களினால் சுழற்றிவரும் இந்த பண்ணைக்கு மட்டற்ற மனநிறைவும், அந்த செயல்களில் இருந்து மக்களுக்கு வெளிப்படும் தேவையற்ற உபரி மனஅலைகளான வஞ்சம், பொறாமை, சந்தேகம், புறம்பேசுதல் போன்ற கொடிய நச்சுக்கிருமிகளுக்கு அவர்கள் அடிமைபடுதல், மற்றும் அதற்குமாறாக அடிப்படை தேவையான கடின உழைப்பு, முன்னுதாரண முறை, முற்போக்கு சிந்தனை, பொதுத்துவம், இயற்கைவழி போன்ற செயல்கள் சற்று தாழ்ந்து காணுவதால் சிறுவருத்தமும் இப்பண்ணைக்கு ஏற்படுகின்றது. இச்சிறு வருத்தத்தால் பெரும் போராட்டத்தை பண்ணை சந்திக்கிறது. எந்த ஒரு செயலிலும் சில இழப்புகளை தாங்கி பல நன்மைகளை பெற்று பொலிவடைவது சற்று கடினமான காரணம் என்பது எல்லோரும் அறிந்த தகவல்தான் அதுபோல பண்ணைக்கு எதிராக சில முற்போக்கு சிந்தனையற்ற மனிதர்களால் கிராமத்தின் ஒருமைப்பாடு என்னும் மக்களின் வலுப்பிணைப்பை உடைத்தெறிந்து வருகின்றதனால் சிறு மனவருத்தமும் இந்த உயிருள்ள பண்ணைக்கு உள்ளது. இருபினும் இப்பண்ணையால் திறன் கொண்டு இயக்கப்படும் மோழியின் ஆழம் எல்லவற்றையும் உடைத்தெறிந்து கிராமத்தையும் அதனுடைய பொருளாதார வளர்ச்சியையும் இவ்வுலகில் ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துசெல்லும் என்பதில் ஐயமில்லை.

பண்ணையின் அழியா நினைவுகள்



***முற்றும்***

Friday, September 10, 2010

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பெருவிழா


வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பெருவிழா 8 மற்றும் 9 செப்டம்பர் 2010 ஆகிய நாட்களில் மிகுவிமர்சையாக ப்ஹரைன் புனித இருதய தேவாலயத்தில் கொண்டாடப்பட்டது. ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கப்பட்டது. தேவாலயத்தின் மு‌க்‌கிய ‌நிக‌ழ்‌ச்‌சியான அன்னை மாதாவின் தே‌ர் பவ‌னி ம‌க்க‌ள் வெ‌ள்ள‌த்‌தி‌ல் வெகு ‌சிற‌ப்பாக நடைபெ‌ற்றது. தமிழில் செபமாலையும், சிறப்பு கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது. நிறைவு நாளான 9 செப்டம்பர் 2010 மாலை 9 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. நிறைவாக தேவாலயத்தில் அன்னையின் அருளால் அனனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது.

மாதாவை நோக்கி செய்த ஜெபம்

மிகவும் இரக்கமுள்ள தாயே, உமது அடைக்கலமாக ஓடிவந்து உமது உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியை கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபொழுதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே தயையுள்ள தாயே இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறோம். பெருமூச்செறிந்து அழும் பாவியாகிய நாங்கள் உமது சமூகத்திலே நிற்கிறோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தாயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.

ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். ஆமென்.


வாழ்த்து

அன்னையே என்றோம் அரவணைத்தாய்!
தாயே என்றோம் தாங்கி நின்றாய்!
மரியே என்றோம் வாழ வைத்தாய்!
அருளே என்றோம் ஆசி பொழிந்தாய்!

ஏழை எளியோரின் கண்ணீர் துடைத்து
எளியோர் வறியோரின் துயர் நீக்கி
மாந்தர் அனைவரின் நோய்களை குணமாக்கி
வங்க கரையோரம் மக்கள் குறை போக்கும்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை
பிறந்த பொன்னாளாம் இந்நாளில்
பக்த பெருமக்கள் அனைவருக்கும்
நல்வாழ்த்துகள் !!!

தாயிருக்க
அவள் துணையிருக்க
நான் தாழ்வதும் இல்லை
வீழ்வதும் இல்லை

மரியே வாழ்க!!!

ஒரு ஆர்வக்கோளாறு

மீண்டும் மீண்டும் பூக்கிறது மனதின் ஆழத்தில்

நீயற்ற பொழுதுகளின்
கனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்

உறக்கம் தொலைத்த இரவுகளை..
உன்னை நினைத்துக் கொண்ட தருணங்களை..
உன்னோடிருந்த நாட்களை....
உன்னைப் போலிருந்த மனிதர்களை...

சொற்களின் இடுக்குகளில்
கசியத் தொடங்குகிறது
விழிகளின் ஈரம்..

கண்கள் தவிர்த்து
காற்றிடம் பேசுமென்னை
முன்னெப்போதுமில்லாத
பரிவின் முகம் கொண்டு
பார்த்துக் கொண்டிருக்கிறாய் நீ...

விடைபெறும் வேளையில்..
மழையின் குரலில்
அழைக்கிறாய் என்னை..

நான்
எத்தனை சொல்லியும் தீராக் காதலை
ஒற்றைச் சொல்லில் நிரப்பி விளிக்கிறாய்..

எங்கோ
கிளைகளுதிர்த்த பூக்களில் ஒன்று
மீண்டும் பூக்கிறது
மனதின் ஆழத்தில்.

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி
என் வாழ்வில் சொர்க்கம் கூடுமடி

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி
என் வாழ்வில் சொர்க்கம் கூடுமடி
என் வார்த்தை எல்லை தாண்டுதடி
உன்னை வாரி அணைக்க தூண்டுதடி
உன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுமடி

ஒரு தாமரை நடக்குது தரை மேலே
அதன் காலடி சுவடுகள் கவி போலே
(ஒரு தாமரை..)
வரும் பாதையில் மணம் வீசுதே
மணம் பரவட்டும் பரவட்டும் விண்மேலே
(ஒரு தாமரை..)

என் தேகம் தீர்க்கும் தேவதையே
உன் பாடல் கேட்டேன் பூங்குயிலே
(என் தேகம்..)
ஒரு பார்வை பட்டால் போதுமடி
என் பசியும் பறந்து போகுமடி
உன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுதடி
(ஒரு தாமரை..)

Tuesday, September 7, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 09

பள்ளிக்கு பின்பு

செந்தில் குமார் தன் இளநிலை பட்டத்தை வேதியியல் துறையில் திருச்சி செயிண்ட் ஸோசப் கல்லூரியில் பெற்று பின்னர் சென்னை புது கல்லூரியில் முதுநிலை வேதியியல் துறையில் சேர்ந்து பயின்று வந்தார். இருபினும் சென்னை சூழல் ஒவ்வாததை அடுத்து கீழப்பட்டிற்கு வந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தார். இவருக்கு திருமணம் மீனா என்ற பெண்ணுடன் 2002 ஆம் ஆண்டு நடைபெற்று கோபிகிருஷ்ணன், அபிராமி மற்றும் விக்கி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணத்தால் சேகர்-காந்தியை விட்டு தனியாக தன் சொத்துகளை பிரித்து செவிடன் காட்டில் களத்தை அமைத்து அங்கேயே குடியேறினார். இவருக்கு செவிடன், கரியான் மற்றும் களர்காடுகளைக் கொண்டும், பெரியகுளத்து வயல்களில் சிலவற்றை கொண்டும் பிரித்துகொண்டார்.

இரவி தன் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு திருச்சியிலுள்ள எம்ஐஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து இளநிலை மற்றும் முதுநிலை கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். அதனை அடுத்து ஒருவருட காலம் சென்னையில் பணியாற்றி பின்னர் சேலத்திலுள்ள விநாயகா கல்வி நிலையத்தில் சேர்ந்து முதுநிலை கணிப்பொறியியல் துறையில் பட்டம் பெற்று அதே கல்வி நிலையத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கணிப்பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற தொடர்ந்து படித்து வருகின்றார். இவருக்கு திருமணம் தனலட்சுமி [முதுநிலை கணிப்பொறியியல் துறையில் சேர்ந்து பயின்று வருகிறார்] என்பவருடன் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் நடைபெற்று சியாம் கிருஷ்ணன் என்ற ஆண்குழந்தை உள்ளது.

சந்திர சேகர் தன் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு திருச்சியிலுள்ள எம்ஐஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் துறையில் சேர்ந்து பயின்று வந்த இவர் சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் குறுகிய காலத்திலே கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இவருக்கு திருமணம் பத்மாவதி என்பவருடன் 2005 ஆம் ஆண்டு கோயிலில் நடைபெற்றது.

கிட்டு தன் பத்தாம் வகுப்பை முடித்தவுடன் திருச்சியிலுள்ள எம்ஐஇடி பல்தொழில்நுட்ப கல்லூரியில் கலைமணி அவர்களின் பரிந்துரைபடி சேர்ந்து இயந்திரவியல் பொறியியல் பட்டையத்தை பெற்று பின்னர் எம்ஐஇடி பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டத்தை இயந்திரவியல் பொறியியல் துறையில் பெற்று ஒரு வருடகாலம் இரிசார் டிவிஎஸ் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியற்றினார். கலைமணி அவர்களின் தலைசிறந்த கல்வி உதவியின் பயனாக அனைவரும் நல்லதொரு நிலையை அடைந்து போற்றதக்க மனிதர்களானார்கள். அதன் பின்னர் திருச்சி தேசிய தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் தொழிற்சாலைப் பாதுகாப்பு பொறியியல் துறையில் பயின்று ஐக்கிய அரபு நாடுகளில் பயிற்சியை முடித்து முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று, ஒரு வருடத்திற்கு மேல் ராஜஸ்தான் உதையபூர் ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி, தற்பொழுது பஹ்ரைன் தேசிய தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதார மையத்தில் 2006 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தொழிற்பாதுகாப்பு மூத்த நிபுணராக பணியற்றி வருகின்றார்.

காந்தி பன்னிரெண்டாம் வகுப்புடன் தன் படிப்பை நிறுத்தி கொண்டார். பின்னர் முழுமுயற்சியுடன் கவனத்தை விவசாயதில் செழுத்தி புதிய முறைகளை கையாண்டு விவசாய உற்பத்தியை பெருக்கினார். போஸ் பத்தாம் வகுப்பை முடித்தவுடன் திருச்சியிலுள்ள எம்ஐஇடி பல்தொழில்நுட்ப கல்லூரியில் இரசாயனப் பொறியியல் பட்டையப் படிப்பை தொடர்ந்து கொங்கு பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டத்தை இரசாயனப் பொறியியல் துறையில் பெற்று அதன் பின்னர் திருச்சி சாஸ்த்ரா [சண்முகா] பல்கலைகழகத்தில் தொழிற்சாலைப் உயிரித் தொழில்நுட்ப துறையில் முதுநிலை பட்டம் பெற்று அதே கல்வி நிலையத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர் கோவா நிக்கோமெட் என்ற நிறுவனத்தில் செயலாக்க பொறியாளராக பணியாற்றி வருகின்றார்.

நவீன் தன் தந்தையின் துறையிலேயே தொடர வேண்டுமென்று எண்ணி சேலம் சட்டக்கல்லூரியில் இளநிலை பட்டம் சட்டத்துறையில் பெற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். சக்தி பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் திருச்சியிலுள்ள கிருத்துவ கல்லூரியில் இளநிலை மின்னனுவியல் பட்டம் பெற்று பின்னர் கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரியில் இளநிலை பட்டம் சட்டத்துறையில் பயின்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார்.

சரண் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் சென்னை இராமசந்திரா மருத்துவ கல்லூரியில் தன் இளநிலை பட்டத்தை மருத்துவ துறையில் பயின்று வருகின்றார். இவர் தன் புத்தி கூர்மையால் அறிவாற்றலில் தலைசிறந்து விளங்குகிறார். இவ்வூருக்கு முதல் மருத்துவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.