மீன் தொட்டி

Wednesday, October 23, 2013

நிர்குணன்

நிர்குணன் தனது கல்லூரி படிப்பை முடித்து இளநிலை பொறியியல் பட்டத்தை கையில் வைத்துகொண்டு பல மாதங்களாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அவனுக்கு வேலை கிடைப்பதென்பது குதிரை கொம்பாகவே இருந்தது. இதனால் தீடீரென ஒரு முடிவுக்கு வந்தவன் வேலை தேடி அலைவதை நிறுத்திவிட்டு, மேற்கொண்டு படிப்பதாக தன் தந்தையிடம் கூறினான். இவன் தந்தை மிகவும் எளிமையானவர், அதேநேரத்தில் தன் சொல்வன்மையால் எதையும் தன்சுற்றுகுள் வைத்துகொள்பவர். தன் பிள்ளைகளை படிக்கவைத்து பார்க்க வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்தது ஆகையால் இவர் தன் மகன் தொடர்ந்து படிப்பதற்கு ஒப்புதலும் அளித்தார்.


தமிழ்நாட்டில் இவன் செல்லாத கல்லூரிகள் இல்லை, பல்கலைகழகமும் இல்லை அனைத்து பாடசாலையிலும் காலியிடம் ஒன்று கூட இல்லை என்று ஒரே பதிலை உதித்தனர். இவன் வேலை தேடி அலைந்த காரணத்தால் காலத்தை தவறவிட்டான், ஆகையால் தன்னை வெகுவாக நொந்து கொண்டான் இன்று அவன் பேச்சை அவன் அங்கங்கள் கூட ஏற்க மறுக்கின்றன அதற்கு சாட்சியாக அவன் அறியாது அவன் கண்கள் இடம் பொருளறியாது தாரைதாரையாக நீரை வடிகின்றது. இத்தருணத்தில் எல்லோருக்கும் வரும் ஒரு ஆவேசம் இவனுக்கும் வந்தது, தன்வாழ்நாளில் முதுநிலை பட்டம் பெறாது தன் உயிர் மடியாது என்று தன் மனதில் ஆழ அழுத்தமாக எழுதிகொண்டான், இருபினும் இச்சமயத்தை எவ்வாறு எதிர் கொள்வது என்று அவனுக்கு புலப்படவில்லை. திரும்பினான் தன் கிராமத்தை நோக்கி பின் சிறிது காலம் தன் விவசாய நிலத்தில் வேலை செய்தான் நிர்குணன். 

சிறு வயதிலிருந்து வயல்களில் வேலை செய்து வருகிறான் ஆகையால் இவனுக்கு விவசாயம் வேலை செய்வது ஒன்றும் புதிதல்ல. மீண்டும் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்று அவன் அடிமனது துடித்தது, அதன்பொருட்டு தன் கிராமத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு பொறியியல் துறை நிறுவனத்தில் வேலை கேட்டு சென்றான், ஆனால் அங்கிருந்த பாதுகாவலனால் அதுவும் தோல்வியைதழுவியது, கடைசியாக ஒரு ஒப்பந்தகாரரின் உதவியோடு நிறுவனத்திற்குள்ளோ செல்ல அனுமதிபெற்றான். சிறிது நேரம் காத்திருக்கும்படி உதவியாளர் மூலம் ஓலை வந்தது, நிர்குணனுக்கு வேலை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற எண்ணத்தில் கைகால் சற்று உதறவும் செய்தது. தம்பி உங்களை மேலாளர் அழைகிறார் என்று உதவியாளர் கூறியதும் சற்று நிதானம் தவறி பின் கட்டுபடுத்திகொண்டு அறையின் கதவை சீண்டி அனுமதி பெற்று மேலாளர் முன் அமர்ந்தான்.

இவனது சுயபுராணத்தை எடுத்து அவரிடம் நீட்டீனான், அதனை பார்த்த அவரது நெற்றி சுருங்கி முகம் சற்று கோணலானது, இவனுக்கு மீண்டும் கைகால் உதற தொடங்கியது, அவனுக்கு புரிந்தது அவனது சுயபுராணம் இன்னும் அதிக உட்பொருட்களையும், பார்த்ததும் கண்கவர் வண்ணம் இருக்கவேண்டும் என்று அறிந்து கொண்டான். அவர் சில கேள்விகளை கேட்டுவிட்டு பின்னர் உனக்கு இங்கு வேலையில்லை என்று கூறிவிட்டு "நீ ஒத்துக்கொண்டால் உனக்கு புதுக்கோட்டையில் உள்ள நிறுவனத்தில் ஒரு வேலையை அமைத்து தருகின்றேன்" என்று கூறினார், அவனது முகம் இப்பொழுது அதிகமாக ஒளிர்ந்தது. வேலை பார்க்குமிடம் எத்திசையில் இருந்தாலும் சென்று வேலை செய்வதற்கு முழு ஆவலாகவே இருந்தான். தன் தலையை நன்கு ஆட்டினான், அவரும் புரிந்துகொண்டு புதுக்கோட்டை நிறுவனத்திலுள்ள ஒருவரின் குறிப்பை அவனிடன் அளித்து அவரை சென்று பார்க்கசொன்னார். அதன்படி இருநாட்கள் கழித்து புதுக்கோட்டை சென்று அவரை சந்தித்தான். அவனுக்கு சில வேலைகளை தினந்தோறும் செய்யுமாறு நிர்பந்தித்தார். நிர்குணனின் பெயரை வருகை பதிவேட்டில் பதிந்து கையொப்பம் இடுமாறு கேட்டுக்கொண்டார். 

அவன் படிப்பிற்கும் இந்த வேலைக்கும் துளியளவுகூட சம்பந்தமில்லை, இருந்தும் காலத்தை கடக்க வேண்டிய கட்டாயம் அவனை தொடர்ந்து வேலையை கவனிக்க செய்தது. ஒருவழியாக ஒரு வேலையில் சேர்ந்துவிட்ட மனநிம்மதியை அடைந்தான். இவன் தினந்தோறும் வீட்டிற்கு வந்து சென்றான், சொல்ப வருமானத்திற்கு இவன் மாதிராபட்டியில் தொடங்கி இலுப்பூர் வழியாக புதுக்கோட்டை சென்றடைந்து பின்னர் மீண்டும் மாதிராபட்டியை அடைய இவனது பயணநேரம் குறைந்தது நான்கு மணி நேரம் நாளொன்றிற்கு இருந்துவந்தது. ஒரு நாள் இவன் ஒரு பேரழகி ஒருத்தியை மாதிராபட்டியில் ஐந்தாம் எண் பேருந்தில் பார்த்தான், கண்டிப்பாக அவளது ஊர் மேற்கில்தான் இருகின்றது என்று திடமாக நம்பினான். மேலும் அவளது பேச்சுவழக்கு, உடையணிந்து வந்தவிதம், உடலமைப்பு, அவளின் குறுகுறு பார்வை போன்ற அனைத்தும் அவள் மேகாட்டுகாரி என்பதை உறுதி செய்து நிர்குணனை நிலைகுலைய வைத்தது. 

நிர்குணனுக்கு இப்பொழுது பேருந்து பயணம் மிகவும் இனிமையாக தோனியது. ஒருவார காலம் இவன் அவளை பார்பதும் அவள் இவனை பார்பதுமாக பேருந்து பிரயாணம் நகர்ந்து கொண்டிருந்தது. இவனுக்கு அவளிடம் ஏதாவது பேசவேண்டும்போல அவனது மனம் தூண்டியது. அவனது மனதிற்கு அடிமைபட்டு அவளிடம் பேசுவதற்கு முடிவெடுத்தான். மணப்பாறை-கொடும்பாலூர்-இலுப்பூர் வழிதடத்தில் ஐந்தாம் எண் அரசு நகர பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. மாதிராபட்டியில் நிர்குணன் எடுத்த முடிவு இலுப்பூர் வந்தும் அவனால் அவளிடம் பேச இயலவில்லை. இலுப்பூரிலிருந்து புதுக்கோட்டைக்கு வேறொரு பேருந்தில் செல்ல வேண்டியிருப்பதால் அங்கு சிறிது நேரம் காத்திருப்பது வழக்கம். அந்த சந்து நேரத்தை பயன்படுத்தி கொண்டான்.

"நீ உமா தோழி அனித்தாதானே? நீ கொடும்பாலூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தாய்தானே?" என்று இடைவிடாது அவள் அருகில் சென்று அவள் பதில் சொல்ல நேரம் கொடுக்காது தனது கேள்விகளை தொடுத்தான். நிர்குணன் சற்று பதட்டமாகவே இவ்விடத்தில் காணப்பட்டான். "இல்லை, நான் செவல்பட்டி அரசு பள்ளியில் படித்தேன், எனக்கு உமா என்று தோழி யாரும் கிடையாது" என்று பதிலளித்தாள். இவனுக்குதான் முன்னரே தெரியுமே, அவள் இவனுடன் படிக்கவில்லை என்று, ஆக இவன் எதிர்பார்த்த பதில்தான். அடுத்து என்ன கேள்வி கேட்பது என்று தெரியாமல் அங்குமிங்கும் தன் பார்வையை செலுத்தினான். அவளுக்கும் இது ஒரு புதுவித உணர்வாகவே இருந்தது, ஆகையால் அவளும் அதற்குமேல் எதுவும் விதண்டவாதமாக தன் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. 

"உன்னைபோலவே அனிதா என்ற தோழி எங்கள் வகுப்பில் படித்தாள், அவளை போலவே நீயும் இருந்ததால் நான் உன்னிடம் கேட்டேன்" என்று அவளிடம் மழுப்பினான் நிர்குணன். அவளுக்கும் இந்த உறவு இத்துடன் முடியகூடாதென்று எண்ணம் தோன்றி ஓரிரு கேள்விகளை இவனிடம் கேட்டாள். நிர்குணனும் தான் பேசுவதறியாது குளறிகொண்டு தன்னை பற்றி சிறிது அதிகமாகவே அவளிடம் கூறினான். அவளும் ஏதோ புரிந்ததுபோல் தலையசைத்தாள். இதற்குமேலும் அவள் அருகில் நிற்க வேண்டாம் என்று எண்ணிய அவன் சற்று தூரமாக சென்று பேருந்துக்காக காத்திருந்தான், இவ்வளவுதூரம் அவளிடம் பேசி அவள் பெயரை கேட்கவில்லையே என்று அப்பொழுது அவன் மனம் அடித்துகொண்டது. இவன் பெயரை அவளிடம் சொல்ல இவனும் மறந்திருந்தான். இவன் அலுவலகம் சென்றும் அவளின் நினைவிலேயே அந்த நாளை கழித்தான். ஏன் இந்த இரவு இவ்வளவு நீளமாக உள்ளது தனக்குதனே கேட்டுகொண்டான், முழுமையான தூக்கம் அந்த இரவில் இவனை தீண்டவில்லை. வெகுசீக்கிரமாக தன் படுக்கையிலிருந்து எழுந்து காலை தன் கையால் கட்டிகொண்டு குந்திவிட்டான், இன்னும் சில நாழிகைகள் இருந்தது, பின்னர் குளித்து ஐந்தாம் எண் நகரபேருந்தை வரவேற்பதற்காக அந்த அதிகாலை இருட்டையும் பொருட்படுத்தாது கிளம்பிவிட்டான். 

அன்று வழக்கம்போல் பேருந்து வந்தது, அதில் அவளைத்தேடி அங்கும் இங்கும் அமைந்த இருக்கைகளை அவன் கண்கள் சல்லடையாக துளைத்தது. அவள் சிக்கினாள் நிர்குணனின் கண்களால் சிறைபிடிக்கபட்டால், என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்றாள். அது இவனுக்கு சாதகமாக அமைந்தது, இருபினும் உள்ளுகுள் ஒரு இனம்புரியாத பயம் அவனை கவ்விகொண்டது, ஆகையால் அவனால் உடனடியாக அவள் அருகில் செல்லவோ பேசவே இயலவில்லை. பல மணிநேர பேருந்து பயணித்திற்கு பிறகு அவன் அவள் அருகில் சென்றான் அவளும் எப்பொழுது என்னருகில் வருவான் என காத்திருந்தாள் போல் அவளது முகம் தீடீரென வெட்கத்தில் சிவந்து, நாணத்தால் உடல்நனைந்து, மெதுவாக பார்வையை அவன் மீது வீசினாள், நிர்குணனுக்கு ஒரு நொடி இதயம் வேலை நிறுத்தம் செய்தது. அதனை அவள் அறிந்திருந்தாளோ என்னவோ! மறுநொடியில் தன்பார்வையை அவன்மீதிருந்து விலக்கி தலையை கவிழ்த்து பேருந்தின் கடினமான தரைதளத்தில் பதித்திருந்தாள். பேருந்தின் செங்குத்தான கம்பத்தில் அவளின் பூக்கரங்கள் கொடிபோல் படர்ந்திருந்தன. 

நிர்குணன் தன் வாழ்நாளில் இதுபோன்ற ஒருதருணத்தை கண்டதில்லை அனுபவித்ததில்லை, ஆகையால் அவன் தன்னை சுற்றி இருபவர்களையோ நடக்கும் செயல்களையோ அவன் பொருட்படுத்துவதாக இல்லை. அவளை அவன் அங்குலம் அங்குலமாக தன் மனமென்னும் பெட்டகத்தில் கண்ணென்ற புகைபட கருவிகளால் கோடானகோடி அழகிய வண்ண வண்ண புகைபடங்களை பதித்துகொண்டான். பேருந்து ஏதோ ஆகாயத்தில் மிதப்பது போல் இருவரும் உணர்ந்தார்கள் ஆனால் உண்மையில் அந்த பேருந்து சாலையின் நிலைமையறிந்து மிககுறைந்த வேகத்தில் பயணித்து கொண்டிருந்தது. இப்பொழுது அவள் "உங்களுடைய பெயர் என்ன?" என்று நிர்குணனிடம் தலைதாழ்த்தி வினவினாள். "கேசவ நிர்குணன் எனது முழுப்பெயர், நிர்குணன் என்றே என்னை அனைவரும் அழைகிறார்கள்" என்று பதிலளித்து சிறிது நேரம் மவுனமாக நின்றான். என்ன இவன், நான் அவன் பெயரை கேட்டதே அவன் எனது பெயரை கேட்பான் என்பதற்குதானே ஆனால் என் பெயரை கேட்காமல் அப்படியே என்னை பார்த்து கொண்டு இருகிறானே! என்று மனதிற்குள் முனுமுனுத்து கொண்டாள். அவளது முனுமுனுத்த உதடுகள் ஆடிய நாட்டியத்தை கண்ட அவன் சட்டென்று "உனது அழகிய பெயரை இன்னும் கூறவில்லையே என்னிடம்" என்று அவளின் முழு எண்ணத்தை தன் சொற்களால் நிறைவேற்றினான். பேரானந்தமடைந்த அவள் "எனது பெயர் வசந்தகுமாரி" என்று தன் பவள உதடுகளின் அசைவினால் உதிர்த்தாள். அவன் அவளது பெயரை பலமுறை மனதிற்குள் உச்சரித்து ரசித்து கொண்டான். ஏதோ ஒரு நாட்டின் ராசகுமாரிக்கு இணையாக அவளையும் அவளது பெயரையும் புணைந்து ஆழ்ந்த ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தான்.



No comments:

Post a Comment